பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறப்போர்



என்று தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஏன் ஏழைகளின் வரிப்பணத்தை ஜமீன்தாருக்கும், இனாம்தாருக்கும் அள்ளிக் கொடுக்கத் திட்டமிடுகிறார்கள்? இந்தத் தவறுதல்களை எடுத்துக் காட்டக் கூட உரிமையில்லை என்றால், அவ்வாட்சியை ஜனநாயக ஆட்சி என்றோ, நாகரிக ஆட்சி என்றோ எப்படிக் கூறமுடியும்?

கழகம் கூறுவதென்ன ?

திராவிடர் கழகம் சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் திருப்பணியைத் தானே செய்துவருகிறது? வரதாச்சாரியின் வஞ்சகத்தையோ, வைத்தியநாதய்யரின் வைதீகப் புடுங்கலையோ, திராவிடர் கழகத்தாரிடம் ஆட்சியாளரால் காண முடியுமா? அவர்களைப்போல் அரசாங்கத்தை எப்படி, எப்போது கவிழ்ப்பது என்று அரசியல் ஆரூடம் பார்த்துக்கொண்டா நாங்கள் வாழ்ந்து வருகிறோம்? நாங்கள் சட்ட சபையை எட்டிக்கூடப் பார்ப்பதில்லையே! தேர்தலில் கவந்துகொள்வதுகூடக் கிடையாதே! தேர்தலில் உதவிசெய்யக்கூட நாங்கள் முன்வருவதில்லையே! அப்படி இருக்க, ஏன் அரசாங்கம் எங்கள்மீது அடக்கு முறையைப் பிரயோகிக்கவேண்டும்? முதல் மந்திரியார் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார், நாம் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறோம் என்று. அத்தவறை நாம், அவர் உணரும்படிச் செய்யவேண்டும். அதற்குத் தியாகம் வேண்டும். நமது இயக்கத்தில் பெரும் அளவுக்குத் தியாகத்தைக் காண்பிக்க வாய்ப்பிருக்கவேண்டும். பலாத்கார உணர்ச்சி சிறிது காட்டப்படினும் அது தியாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.