பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அறப்போர்



கூடிய அரும்பெரும் நூல்களையும், 7000, 8000 கல் தொலைவிற்கு அப்பால் உள்ள மேனாட்டு ஆங்கிலேயர், ஜர்மானியர் முதலான மக்கள் பேசியும் கற்றும் வருதலோடு, தத்தம் மொழிகளிலும் அந்நூல்களை மொழிபெயர்த்து, விளக்கவுரைகளும் எழுதி, அவற்றிற்குத் தக்க பெருமை அளிக்கும் போது, நமக்கு மிக நெருங்கிய தொடர்புடையவர்களான 400, 500 கல் தொலைவிலிருக்கும் நம் வட இந்தியர்கள் மட்டும் நம் மொழியையோ அல்லது அதன்கண் உள்ள நூல்களையோ ஒரு சிறிதும் கண்ணேறெடுத்துப் பாராமல் இருப்பதன் காரணம், அவர்களுக்கு நம்மீதும், நம் மொழியின் மீதும், நம் மொழியின்கண் உள்ள சிறந்த நூல்களின் மீதும் உள்ள அழுக்காறும், மனக்காழ்ப்பும், பொறாமையுமேயல்லாது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதாகக் கூற எவருக்கேனும் நாவெழுமா?

இந்திய நாட்டின் ஒரு பகுதியினரான வடவர்களுக்கே, நம் மீதும், நம் மொழியின் மீதும் நல்லபிப்பிராயம் இல்லாமல் இருக்கும்பொழுது, நாம் மட்டும் அவர்களுக்கு நன் மதிப்புக் கொடுத்து அவர்கள் மொழியைக் கட்டாயமாகக் கற்கவேண்டுமென்று நம் நாட்டு தலைவர்களிற் சிலர் இப்போதும் மடிகட்டி நின்று பிடிவாதஞ் செய்வதன் பொருள் தான் யாதோ?

தென்னாட்டவர்கள் இந்தி கற்றுவிட்டால் வடநாடு சென்று உத்தியோகம் பார்க்க வசதியாய் இருக்குமென்று சிலர் கூறுகின்றனர். அங்ஙனமாயின், இப்போது வடநாட்டிலுள்ள இந்தி கற்ற அத்தனைபேரும் உத்தியோகத்தில் அமர்ந்துதான் இருக்கிறார்களா? வட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அறவே இல்லையா?