பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

7



தென்னாட்டில் இந்தி இயக்கம் தொடங்கியதிலிருந்து வடநாட்டிலுள்ள பலர், தென்னாட்டவர்கள் இந்தி கற்றுவிட்டால், அவர்கள் நம் நாட்டுக்கு வந்து உத்தியோக வேட்டையாட முயல்வார்களே, அப்போது எங்கள் பாடு திண்டாட்டமாய் முடியுமே என்ற கிளர்ச்சியைச் செய்து வருகிறார்களாமே! அது உண்மையா, அல்லது பொய்யா?

தமிழ் மக்கள் இந்தி கற்றுக்கொண்டாலும், கற்றவர்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்கு வடநாட்டில் உத்தியோகம் கிடைக்கும்?

இஞ்ஞான்றைத் தமிழ் மக்கள் பலர் பெங்களூர், மைசூர், சிகந்தரா பாக்கம், புனா, பம்பாய், கல்கத்தா, கராச்சி, காசி, காக்கிநாடா, நெல்லூர் முதலான வட இந்தியாவின் பற்பல ஊர்களிலுஞ் சென்று, அங்கு தம் வாணிக வாழ்க்கையிற் சிறப்பெய்தி இருக்கின்றனரே! இம் மேலே குறிப்பிட்ட ஊர்களில் வைகி வாழ்ந்துவரும் நந்தமிழ்மொழி பேசும் தமிழ் மக்கள் எல்லோரும் தமக்கு ஒரு பொதுமொழி இல்லாததனால், தாம் நடாத்தும் வாணிக வாழ்க்கைக்கு ஏதேதோ இடையூறுகள் ஏற்படுவதாகவும், அதனால் தமக்கும் தாம் சென்று உறையும் ஊர்களிற் இருப்பவர்கட்கும் பொதுமொழியாக இந்திமொழியை ஆக்கி உதவவேண்டுமென்றும் முறையிட்டு விண்ணப்பித்துச் கொண்டார்களா?

அல்லது வடஇந்தியாவின் பற்பல பகுதிகளின் பற்பல மொழிகளைப் பேசுபவர்களான பெருந்தொகை மக்கள் நந்தமிழ் நாட்டின்கண் உள்ள பற்பல ஊர்களிலும் வந்திருந்து வாணிகம் முதலான தொழில்களைச் செய்கிறார்களே! அவர்களாவது தங்களின் வாணிக வாழ்க்கைத் துறைகளிற் பயன்படுத்திப் பேசுவதற்காக இந்தியைப் பொதுமொழி-