பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

61



அடிபடுகிறான்! திராவிட கலாசாரத்தைக் காப்பாற்ற விழைந்த நமது தோழனின் எலும்பு அதோ முறிகிறது. திராவிட நாட்டில் திராவிடன் கலாசாரத்தைக் காப்பாற்றி, அதோ நமது தோழன் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறான்!' என்று நீங்கள் சிந்திக்கவேண்டும். அச்சிந்தனை உங்கள் மனத்தில் ஒரு உறுதியை உண்டாக்கும். அவ்வுறுதி தான், நமக்குப் பயன் தரக்கூடியது. ஆத்திரம் ஆபத்தானது; பயன் தர இயலாதது. எனவே, ஒடிந்துவிழுந்த கைகளைக் கண்டு நீங்கள் 'ஓ' வென்று அழாதீர்கள். அந்தத் தியாகத்திற்குத் தயாராகத்தான் தொண்டர்கள் அத்திட்டத்தில் வந்துள்ளார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கைகளை மட்டுமல்ல, கால்களை மட்டுமல்ல, தம் உயிரையே அர்ப்பணிக்கத் தயாராகத்தான் அவர்கள் போர்க்களம் புகுந்துள்ளனர் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அத் தியாகம் ஊட்டக்கூடிய மனோ உறுதியை நீங்கள் பெறுங்கள். தொண்டர்கள் அறிந்திருக்கிறார்கள்; உயிர் பெரிதல்ல, தன்மானந்தான் பெரிதென்று!

உயிர் பல இடங்களில் பிரிவதும், பிரிக்கப்படுவதும் தொண்டர்களுக்குத் தெரியும். லாகூரில் ஆண்டவனை வழிபட தர்காவுக்குச் சென்றவர்களில் 11 பேர் கூட்டத்தில் நசுக்குண்டு மாண்டார்கள் என்ற செய்தியை தொண்டர்கள் பார்த்திருக்கிறார்கள். வழிபடச் சென்ற இடத்தில் சாவு நேர்கிறபோது, மறியல் செய்யச் செல்லுமிடத்தில் சாவேற்பட்டால் அதைப்பற்றிக் கவலைப்படக் காரணம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்!