பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அறப்போர்


ஏட்டிக்குப் போட்டியா?

நான் ஒரு காஞ்சிபுரம் வாசி. எப்போதாவது பஸ் வழியாகச் சென்னை வருவேன். வரும் வழியில் எங்காவது ஒரு இடத்தில் பஸ் நிற்கும். அதன் பக்கலில் ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கும். அதற்குள் நுழைந்து அங்குள்ள ஐயரை 'என்ன இருக்கிறது' என்று கேட்டால் "இட்லி உண்டு, தோசை உண்டு, அதற்குச் சட்ணியும் உண்டு, உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்பார். இட்லி ஆறிப்போயிருக்கும். தோசை உலர்ந்து போயிருக்கும். சட்ணி ஊசிப்போயிருக்கும். "என்னையா, எல்லாம் கெட்டுப்போயிருக்கே, ஏதாவது சூடா இருக்கிறதா?" என்றால், "நெருப்புதான் இங்கு சூடா இருக்கிறது' என்பார். அதைப்போல் இருக்கிறது, அவினாசியார் கூற்று. இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். "என்னையா, இத்தனையும் எங்களுக்குத் தேவையற்றதாய், எங்களுக்குக் கேடு செய்வதாய் இருக்கிறதே, வேறு நல்லதுண்டா?" என்று கேட்டால், "உண்டு, அத்து மீறினால் அடக்குமுறை உரிமைதான் என்கிறார். சர்க்காரை நடத்துபவர்கள் கையில் என்னென்ன சாதனங்கள் உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். அச்சாதனங்கள் உபயோகப்படுத்தப்படுவதைப் பார்த்திருப்பதால் அல்ல; அச்சாதனங்களை நாங்களே ஒருகாலத்தில் உபயோகப்படுத்திப் பார்த்திருப்பதால்தான். அச்சாதனங்கள் எந்த அளவுக்குப் பயன்படும், எங்கு அவை பயனற்றுப்போகும் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள்மீது அடக்குமுறைப் பிரயோகம் செய்வதற்காக நாங்கள் யாரையும் வெறுக்கவும் மாட்டோம். நாட்டில் குரோத உணர்ச்சியை வளரவிடவும்