பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

69


யும்; 'யாரோ சில சு. ம. காலிகள் ஹிந்தி வேண்டாமென்று கூச்சலிட்டார்களாம். போலீஸ் அவர்களை இழுத்துச் சென்றதாம்' என்று பத்திரிகையில் எங்கேயாவது ஒரு மூலையில் வரும். அதன் பின் எங்கேயாவது பெரிய 'சந்திரலேகா விளம்பரத்தின் அடியில், கண்ணுக்குத் தெரியாத சிறு எழுத்தில் 'சு. ம. காலிகளுக்கு 6 மாத தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி போடப்பட்டிருக்கும். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மறியல் செய்கிறார்கள் என்றால் பக்கம் பக்கமாகச் செய்தி வெளிவரும். புகைப்படங்கள் கூடப் போடப்பட்டிருக்கும். அகில உலகத்திலும் செய்தி பரப்பப்படும். ரேடியோக்கள் அதிரும். அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் அவர்கள். அவர்களுடைய பித்தலாட்டத்தை வெளிப்படுத்தக்கூட போதிய சாதனம் இல்லாதவர்கள் நாம். நமக்குக் கருத்தில் தெளிவுண்டு; ஆனால் அதிகாரம் இல்லை. சாதனம் இல்லை. அவர்களுக்குக் கருத்தில் தெளிவில்லை. ஆனால், அதிகார சாதனம் அனந்தம் உண்டு. நாங்கள் யாரையும் ஆசை வார்த்தை கூறி, போரில் கலந்துகொள்ளும்படி அழைக்கவில்லை. வந்தால் கையுடைந்து போவீரோ, காலுடைந்து போவீரோ, கண்ணிழந்து போவீரோ, அல்லது திரும்பியே போகமாட்டீர்களோ, அது எங்களுக்குத் தெரியாது என்று கூறியேதான் தொண்டர்களை அழைக் கிறோம்.

சிறை சென்றால் நிலமில்லை

சிறைசென்று திரும்பினால் 6 ஏக்கர் நிலம் தருவதாகக் கூட எங்களால் வாக்களிக்க முடியாது என்று கூறித்தான் தொண்டர்களை அழைக்கிறோம். அதற்கு இணங்கித்தான் தொண்டர்கள் வருகிறார்கள்.