பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அறப்போர்


சென்ற ஹிந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்ததால் முத்து, நடராசன் ஆகியோர் கல்லறையை உங்களுக்கு. ஞாபகமூட்ட விரும்புகிறேன். தமிழுக்காக உயிர்நீத்த அவர்களுக்குக் கிடைத்தது கல்லறை! கல்லறைதான் என்றாலும், அதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றதல்லவா? அக் கருத்தை அழியாமல் இருக்கச் செய்யத்தான், அவர்களைப் போல் உயிரையும், அர்ப்பணம் செய்யத் தயாராக வாருங்கள் என்று கூறித் தொண்டர்களை அழைக்கிறோம். அப்படிப்பட்ட தியாகம், நிச்சயம் எதிரிகளைக் கட்டாயம் பணியவைக்கும். ஹிந்தியின் காதலால் கருத்தழிந்திருக்கும் முதலமைச்சரும் திராவிடர் ரத்தம் அறப்போரில் சிந்தப்படுவதைப் பார்ப்பாரானால் நிச்சயம் கண்ணீர் விடத்தான் செய்வார். அதிகாரத்தில் இருப்பதால் அக்கண்ணீரை வெளியிடுவது சற்று சங்கடமாக இருக்கலாம். அதனால் கண்ணீர் வெளிவராமலும் இருக்கலாம். அப்படியாயின் கண்களாவது கட்டாயம் சிவக்கும். கண்கள் சிவக்காவிட்டாலும் உள்ளம் சிவக்கும். அதுவே போதும்! வெதும்பும் திராவிடர் உள்ளம் ஒவ்வொன்றும் நமது வெற்றி நெருக்கத்தின் அறிகுறியாகும். அப்படிப்பட்ட உள்ள மாறுதலை உண்டாக்குவதற்குத்தான், போதுமான தொண்டர்கள் தேவை1