பக்கம்:அறவோர் மு. வ.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 147

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. இவர்களைத் தமிழறிஞர், சீர்திருத்தக்காரர் என்று புகழ்கிறார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் மாநில அரசு மாணவர்களைக் கொடுமைப்படுத்தி வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் என்று தந்தி கொடுத்தார். ‘ஐந்தெழுத் தால் ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்ற அடிகளை மொழிநூல் வகுப்பில் ஒரு முறை படித்துக்காட்டித் தமிழ்நாட்டுச் சோற்றையும் பருப்பையும் நெய்யையும் உண்டு இப்படித் தமிழிற்குப் புறம்பாக ஒரு கை எழுதியதே என்று பேசினார். ஆரவாரம் காட்டாமல் அமைதியாகத் தொண்டாற்றும் நோக்கங் கொண்டவர்; கடமையுணர்வு நிறைந்தவர். மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தம் உடல்நிலையைச் சற்றேனும் பொருட்படுத்தாது கோப்புகள் (Files) பலவற்றைப் பார்த்து முடித்தார். வேண்டியவர்கள் திருவாளர்கள் பெரி. தியாகராசன், திரு ஒய். சத்தியமூர்த்தி, திரு கு. ராசவேலு முதலானோர் தடுத்தும் கேட்கவில்லை. மருத்துவ மனைக்குப் போகும்போதும் கடமையை நினைந்து மதுரைப் பல்கலைக்கழகப் பதிவாளர்க்கு அடுத்து நான் குறிப்பிடும் வரை கோப்புகளை எனக்கு அனுப்ப வேண்டா’ என்று கடிதம் எழுதி அஞ்சலில் சேர்த்துவிட்டே சென்றார்.



இவர் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகும் வழக்கம் உடையவர் இல்லை. குழந்தைகளுக்குக் காது குத்துதல், மொட்டையடித்தல் முதலான சடங்குகளை விரும்புவதில்லை. திருமணம், சாவு தவிரக் காதுகுத்தல், மொட்டையடித்தல், கருவளர் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு வீட்டினர் செல்வதை விரும்புவதில்லை. சோப்புப் போட்டுக் குளிப்பதில்லை. ராகுகாலம், எமகண்டம் பார்ப்பதில்லை. சகுனங்களில் நம்பிக்கை கொள்வதில்லை.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/150&oldid=1462063" இலிருந்து மீள்விக்கப்பட்டது