பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

149நரகத்தின் வளைகுடாவான பஞ்சத்தில், எனது வாழ்க்கைத் தெப்பம், சுழலால் பாதிக்கப்படுகின்ற நோக்கில் எனது கண்கள், தமிழென்ற நம்பிக்கை நட்சத்திரத்தை அன்றி, வேறு எதையும் காணவில்லை என்பதும் உனக்குத் தெரியும்!

அப்போதெல்லாம், நான் உன கிரணங்களால் ஒளி கண்டு, நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன்.

எனது ஆசையும், காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கியதாகும்!

என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் - எனது இறுதி காலத்தையும் - நான் அந்த பலி பீடத்தின் மீதே வைத்துத் துவக்குகின்றேன்.

உனது கதிர் வட்டத்தால், என்னை எந்த உருவமாக்கினாலும் - அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்!

எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும், ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாறாதிருக்கும் உனது பாதத்திலே வைக்கின்றேன்.

எனது எண்ணங்கள் அத்தனையும், உன்னிடத்திலே தான் துவங்குகின்றன.

கொஞ்சமும் தாமதமின்றி, அவை உன்னைப் பின் தொடர்கின்றன!

எனது பகற்கனவுகளும் இராக் கனவுகளும், நீ கொளுத்திய ஆயிரம் விளக்குகளால் ஆனவை.

மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது, என்னுடைய கரம் உன்னை நோக்கி வளர்கின்றது!

அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடியிலே வீழ்கிறது!

மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்குகின்ற தன்மையைப் பார்த்தால்; உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது.