இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சந்தனக் கலவையில் சமைத்த உருவம்!
வைரக் கல்லில் வடித்த விழி!
சிந்தனை வளத்தால் செழித்த முகம்!
தொடுவானுக் கிடையிலே இவ்வித அமைப்புடன் நின்றிருந்தான் ஒருவன்!
பொங்கும் கடலலையின் கரங்கள்; அவன் தாள்களைப் போய் வருடின!
வருடித் திரும்பிய அலைகளது சிரித்த சிரிப்புக்குக் கூற உவமையில்லை!
அந்தியின் திரைக்கு முன்னால் அந்த அழகு வடிவத்தானை, புள்ளினங்கள் வாழ்த்திப் பாடிய வண்ணமிருந்தன!
மரகதப் பச்சை இலைகள் தழைத்திருந்தன!
முப்பழக் கனிகள் கிளைகளில் பழுத்திருந்தன.
சித்திரப் பூந்தோட்டத்து இரத்தின மலர்கள் தேனை வடித்து நின்று சிரித்தன!
அந்த அழகுமிகு அற்புதச் சோலைக்குள் - அவன் பொற் காலமெனப் புகுந்தான்!