பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

மணவையாரின் சமய நல்லிணக்கப் பணிகள்


வரின்- சமய விவகாரங்களில் மற்றவர்கள் அறவே தலையிடக் கூடாது; தாக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவக்கூடாது; போராயினும் அமைதிக் காப்பாயினும் எல்லா முக்கிய செயல்பாடு களின் போதும் பல்வேறு குழுவினரும் ஒருவரை யொருவர் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; குற்றம் புரிந்தவர்களுக்கு அவரவர் சமய நெறிப்படியே தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளை எடுத்துரைப்பதை விளக்கும் மணவையார், நபிகள் நாயகத்தின் காலத்தில் அவரது தலைமையில் பல்வேறு சமயங்களையும், இனங்களையும் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததையும், மதீனா நகர அரசு எந்த ஒரு குறிப்பிட்ட சமயச் சார்பும் இல்லாமல் எல்லாச் சமயங்களையும் போற்றுவதாக அமைந்திருந்ததையும் விவரித்துக்கூறி, அவ்வரசு இன்றும் நமக்கு முன்மாதிரியாக விளங்குவதைக் குறிக்கின்றார்.

நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய ஆட்சி ஆசியா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் பரவி நிலை பெற்றது. பிற சமயங்களைப் சார்ந்த குடிமக்களும் இஸ்லாமிய ஆட்சியை வரவேற்றனர் என லாமென்ஸ், தெகோயெஜி போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையான ஒரு சமயச் சார்பின்மை அந்நாடுகளில் இடம் பெற்றிருந்ததை மணவையார் பெருமிதத்துடன் விளக்குவர்.

அவ்வாறே இந்திய முஸ்லிம்கள் தங்கள் நாட்டுக்கும் அரசுக்கும் உண்மையுள்ள குடிமக்களாக வாழ்ந்ததனை வரலாற்றுச் சான்றுகளுடன் அவர் விரித்துக் கூறுகிறார்.