பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



154

தமிழில் அறிவியல் இலக்கியமும் மணவையார் சிந்தனையும்


டவைகளே அதிக வெற்றி பெற்றுள்ளன என்று ஆராய்ந்து கூறியுள்ளார் மணவையார். சிறுவர்களுக்காக இதுவரை வெளிவந்த 3,000 நூல்களில் 70-க்கும் மேற்பட்டவை அறிவியல் செய்திகளை உள்ளடக்கியவைகளே என்றும் இந்நூல்களில் விண்வெளியியல், நிலவியல், உயிரியல், உடலியல், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகளிலேயே அதிகமான சிறுவர் நூல்கள் வெளிவந்துள்ளன என்றும் இவரது ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

என்.கே. வேலன், தி.ஜ.ரா, கல்வி கோபாலகிருஷ்ணன், ரேவதி, மலையமான், அழ.வள்ளியப்பா, பூவண்ணன் போன்றோரின் சிறுவர் படைப்புகளில் உள்ள அறிவியல் இலக்கியங்களை ஆழமாக அலசி ஆராய்கிறார்.

பெரியவர்களுக்காக அறிவியல் இலக்கியப் படைப்பவர்களில் முதலிடம் பெறத்தக்கவராக சுஜாதாவைக் குறிப்பிட்டு மாலன், சுப்ர-பாலன், பூரீதரன், செம்மல் போன்றோரைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

அறிவியல் இலக்கிய வழிகாட்டி

அறிவியல் இலக்கியம் குறிப்பாக அறிவியல் புனை கதை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், ஈடுபட விரும்புகின்றவர்களுக்கும் மணவையார் வழிகாட்டுகிறார்.

முதலாவதாக, அறிவியல் புனைகதைகளை எழுத விரும்பும் எவரும் எவரையும் முன்மாதிரியாகக் கொண்டு எழுதாது அவரவர் போக்கில், பாணியில், உத்தியில் படைப்பது சிறந்தது என்கிறார்.

அடுத்ததாக, எந்த அறிவியல் செய்தியை அடியொற்றி புனைகதை இலக்கியம் படைக்க விரும்புகிறோமே அந்த அறிவியல் செய்தியைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.