பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

109



(iii) ‘ஆசீவ’ என்ற சொல் வாழும் முறை - இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையினை உரைக்கும் என்று விளக்கம் காண்பார் ஹார்ன்லே (Hoernle) என்பார்.

ஆசீவகக் கொள்கைகள் : இந்தச் சமயத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்தச் சமயத்தின் பகைவர்களால் எழுதப்பெற்றவை. ஆகவே, இவை நடுநின்று கூறாமல் சார்புபற்றிக் கூறியுள்ளன என்று கருதப்பெறுகின்றது. மணிமேகலை என்ற பௌத்த நூலிலும் (சமயக்கணக்கர் தந்திறம் கேட்ட காதை), நீலகேசி என்ற சமண நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்), சிவஞானசித்தியார் என்ற சைவ சாத்திர நூலிலும் (பரபக்கம் - ஆசீவக மதம்) இந்தச் சமயக் கொள்கைகள் எடுத்துக்காட்டப்பெற்று மறுக்கப்பெற்றுள்ளன. இக்கொள்கைகளின் சுருக்கம் ஈண்டு, சில தலைப்புகளில் காட்டப்பெறுகின்றது.

(i) அணுக்கொள்கை : இக்கொள்கையினை முதன்முதலில் அறிந்துரைத்த சிறப்பு ஆசீவகர்க்கு உரியது. நிலம், நீர், தீ, வளி, இன்பம், துன்பம், உயிர் என்ற ஏழுவகை அணுக்களால் அமைந்தன என்பது மற்கலியின் கொள்கையாய்ப் பிடகம் பேசுகின்றது. ஆகாயபூதம் ஆசீவகர்க்கு உடன்பாடில்லை. மணிமேகலையில் வரும் ஆசீவகவாதி ‘மற்கலி நூலின் வகை’ இதுவென எடுத்துரைக்கும்போது, ‘துரந்தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு’ (மணிமேகலை 27:113) என்றும், ‘இன்பமும் துன்பமும் இவையும் அணுவெனத்தகும்’ (மேலது 27:163) என்றும் பாலிபிடகத்தின் வழிநின்று தம் கருத்தினை உரைத்தல் உளங்கொள்ளத்தக்கது. அணுவின் இயல்புகளை,


“ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா…
…………………முளைக்கும்” (மேலது 27 : 126 - 136)

என்று இயம்புதலைக் காணலாம். ஓர் அணு ஓர் அணுவில் புகாவிடினும் அணுத்திரளைகளாய் இணைதல் உண்டு என்பது ஆசீவகரது கொள்கையே (மேலது 27:116-17), ஆசீவகசின் கருத்துப்படி தனித்த ஓர் அணு தெய்வக் கண்ணுக்குத்தான்