பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

81



“தொக்கு இலங்கி யாறுஎல்லாம்
        பரந்து ஓடித் தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க
        மாட்டாத” (பெரு.திரு. 5 : 8)

என்ற வித்துவக்கோட்டு அம்மானின் பாசுரப் பகுதியில் கண்டு மகிழலாம். ‘சாலைகளும்’, ‘ஆறுகளும்’, ‘உரோமாபுரியும்’, ‘ஆழ்கடலும்’ குறியீடுகளாய் நின்று ஒரு பேருண்மையை உணர்த்துகின்றன. சமயங்கள் யாவும் ஆண்டவனை அடைய வழிகாட்டுகின்றன என்பதுதான் அந்தப் பேருண்மை. நாம் இருப்பது அறிவியல் காலம்; எல்லாவற்றையும் அறிவியல் நோக்கில் காண்பதற்கு மனம் விழைகின்றது.

அநுபவ அறிவு : ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கின. மனிதனுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. ஒன்றாய் இருந்த விதை பின் வேராய், அடிமரமாய், கிளையாய், கொம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாய் மாறுவது போலவே, வித்தென, அருவமாய் இருந்தவை மரம் என்று உருமாறியது என்று அவன் நினைத்தான். இக்கொள்கையைப் பரிணாம வாதம் - கூர்தல் அறம் என்று வழங்கினர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர் சிலர்; நீர் என்றனர் பிறர்; தீ என்றனர் ஒரு சாரார்; காற்று என்றனர் பிறிதொரு சாரார். வேறுசிலர் வான் என்றனர். இந்தப் பூசலில் கலந்துகொள்ள அஞ்சி, சிலர் ‘தென்காசி வழக்காக’, கோமுட்டி சாட்சி போல், ஐந்தும் அடிப்படை என்றனர். இக்கொள்கையை வற்புறுத்தியவர் அரிஸ்டாட்டில் என்பார். இதனை முன்னரும் குறிப்பிட்டோம்.

(3) அகிலத் தோற்றம் : இந்திய தத்துவ தரிசனம் இவ்வுலகம் - ஏன் இந்த அகிலமே (Universe) - ஐம்பெரும் பூதங்களால் ஆகியதாய்க் கூறுகின்றது. பண்டைய இலக்கணமாகிய தொல்காப்பியம் இதனை,

“நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்....”11[1]

என்ற நூற்பாவால் குறிப்பிடுகின்றது. ஈண்டு, உலகம் என்பது அகிலத்தினையும் குறிப்பதாய்க் கொள்ளலாம்.

இந்த நூற்பாவில் உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும் குறிக்கும் என்பது இளம்பூரணரது கருத்தாகும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி,


  1. 11. தொல் - பொருள் - மரபு - 91