பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அறிவுக்கு விருந்து

[2]

'கலிங்கத்துப் பரணி' என்னும் நூல் அக்காலத்துப் பேரரசனாகத் திகழ்ந்த முதற் குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைக்கொண்டு கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து வென்ற செய்தியைக் கூறுவது. இந்நூலின் ஆசிரியராகிய சயங்கொண்டார் என்ற கவியரசரும் பாட்டுடைத்தலைவனான குலோத்துங்கன் என்ற புவியரசனும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது அறியத்தக்கது. குலோத்துங்கன் சோழ நாட்டை ஆண்டுவந்தபொழுது ஒரு நாள் பாலாற்றங்கரைக்குப் பரியின் மீது இவர்ந்து வேட்டையாகச் செல்லுகின்றான். வேட்டை முடிந்ததும் காஞ்சியிலுள்ள மாளிகை யொன்றில் செய் தமைத்த சித்திர மண்டபத்தில் முத்துப் பந்தரின் கீழ் தேவியர், அமைச்சர், தானைத்தலைவர் முதலியோர் புடைசூழ வீற்றிற்கும்பொழுது சிற்றரசர் பலர் வந்து அவளைத் திறைப்பொருள்களுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்த பன்மன் மட்டிலும் அவனை வந்து காணவில்லை. அதைக் கண்ட குலோத்துங்கன் தன் தானைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானைத் தண்டெடுத்துச் சென்று கலிங்க அரசனின் செருக்கை அடக்கி வருமாறு ஏவுகின்றனன். சோழர் படை தன் நாட்டை வந்து சூழ்ந்தமையைக் கேட்ட கலிங்க வேந்தன் 'வெந்தறுகண் வெகுளியினால் வெய் துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி',

வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும்
மலாக்கள்கை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியானோ என வெகுண்டு
தடம்புயங்கள் குலுங்க நக்கே,

[கவிகை வெண்கொற்றக்கொட; தண்டு- சேனை]