4
இறைவன், தன் திருவடிக்குத்தொண்டுபட்ட அடியார்களாகிய நாங்கள் எங்கள் துன்பத்தையறியும் படி எடுத்துக்கூறி முறையிட்டால் அம்முறை யீட்டைத் திருச் செவியாற் கேளாமைக்கும் எமக்கு உறவாகாமைக்கும் காரணம் யாதோ? எ-று.
‘கேளாததும் கேளாமையும் என்கொலோ’ என ஈரிடத்தும் உம்மை விரித்துரைக்க. கேளாகாமை என்ற தொடர் கேளாமை என மருவியது. கேளாகாமை -உறவாகாமை.
இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் — இறைவனே
எந்தாய் எனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
(5)
இ-ள் (எப்பொருளிலும் நீக்கமறத்தங்குதலால்) இறைவன் என்ற காரணப் பெயரினையுடைய கடவுளே எல்லாவுயிர்களுக்கும் உடல், கருவி, உலகு நுகர்பொருள் என்பவற்றைப் படைத்தளிக்க வல்லவன். தன்னால் தோற்று விக்கப்பெற்ற அவற்றை மீண்டும் ஒடுக்குதலைச் செய்பவனும் அவ்விறைவனே. எமது தந்தையே என அன்பினாற் பரிந்து வேண்டும் எங்கள்மேல் கொடிய துன்பங்கள் வந்து வருத்துங்கால் அவற்றை அறவே நீக்கி எங்களை வாழ்விப்பவனும் அம்முதல்வனே.எ-று.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்து எவ்வுயிர்க்கும் அருள்புரியவல்ல தனி முதல்வன் இறைவன் ஒருவனே என்பது கருத்து.