உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

‘என்போல்வார் சிந்தையினும்’ என்புழி உம்மை, தமது தாழ்வுணர நின்றமையின் இழிவு சிறப்பு; ‘சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்து மென்சிந்தையுள்ளும்’ என்புழிப்போல.

எளிய திதுவன்றே யேழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆவா—ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலு மெம்மானை யுண்ணினைந்த
சிந்தையராய் வாழும் திறம். 46

இ-ள்: ஒளி திகழும் நீலகண்டத்தையுடைய எமது தந்தையும் பாம்பினை அணிகலனாகப் பூண்டு உலவும் எம்பெருமானும் ஆகிய இறைவனை ஆழ்ந்து தியானிக்கும் உள்ளமுடையவர்களாய் வாழும் முறையாகிய இது, அவனருளைப் பெறுதற்கு மிகவும் துணை புரியும் எளிய நெறியல்லவா? இங்ஙனமாகவும் ஏழை மக்களாகிய நீவிர் சிறிதும் அன்பில்லாதவராகவும் அறிவில்லாதவராகவும் உள்ளீர். நுமது செய்கை ஐயோ இரங்குதற்குரியதேயாம் எ-று.

சிந்தையராய் வாழும் திறமாகிய இது எளியது அன்றே என இயைத்துரைக்க. இங்ஙனம் பாட்டின் இறுதியிலுள்ள தொடர் முதலடியின் முதல் தொடரோடியைந்து பொருள் கொள்ள நிற்றலின் இது பூட்டுவிற் பொருள்கோள். இது எளியது அன்றே என்புழி ஏகாரத்தை வினாவாகக் கொண்டு இஃது எளியதல்லவா ? எளிதேயாம் எனப் பொருளுரைக்க. இனி, அன்றே யென்புழி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொண்டு, எம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறமாகிய இது எளியதன்று மிகவும் அரிதே யாம் எனப் பொருள் கூறுதலும் உண்டு. யாதும்— சிறிதும். ஆ ஆ—ஐயோ, இரக்கக் குறிப்பு.