52
இறைவனாகிய முதல்வனை அவனருளாலன்றி உள்ளவாறு காண இயலாதென உலகினர்க்கு அறிவுறுத்துவார், ‘எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன், எவ்வுருவோ நின்னுருவம் ஏது’ என இறைவனை நோக்கி வினவினார். ‘அவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என வரும் ஆளுடைய அரசர் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாம்.
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகு மேதாகா
தேதொக்கு மென்பதனை யாரறிவார் — பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.
(62)
இ-ள் : பூதகணங்கள் போற்ற வில்லேந்திய வேடுவனாகி அருச்சுனனுடன் போர் எதிர்ந்த அந்நாளில் வலிய வேடனாக விளங்கிய அத்திருவுருவம், எத்தகைய அழகிய தோற்றத்தை ஒத்திருக்கும்? எதனை ஒவ்வாது? அதற்குப் பொருந்தியது எது? பொருந்தாதது எது? எதனோடு பொருந்தும் என்ற இவ்வியல் பினை அறிந்து சொல்ல வல்லார் யார்? (ஒருவருமிலர்) எ-று.
பூதப்பால் — பூதகணங்களினிடையே. இனி, பூதம் என்ற சொல் சென்ற காலம் என்ற பொருளில் வந்த தாகக் கொண்டு, பூதப்பால்— முன்னாளில் எனப் பொருள் கூறுவாருமுளர்.