உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

எதுகைக்குப் பொருந்த ‘வடிவின் மேய சிலம்பு’ எனப் பாடங்கொண்டு, வடிவும் ஒளியும் ஒருங்கு பொருந்தப் பெற்ற மலை எனப் பொருள் கூறினும் ஆம்.

சிலம்படியா ளூடலைத் தான்றவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி — நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. (68)

இ-ள் முதிராத இளம்பிறையை யணிந்த சிவபெருமான், மலை மகளாராகிய உமாதேவியாரது ஊடலைத் தான் தவிர்த்தல் கருதித் தனது திருமுடியை அத் தேவியாரது சிலம்பணிந்த திருவடிமேற் பூசப் பெற்றுள்ள செம்பஞ்சின் நிறத்தோடு சேர்த்தித் (தலை தாழ்த்தி வணங்கி) தனது சடையினை யொத்து விளங்குவதாகிய செவ்வானத்தைக் காட்டிலும் அணி நலம் பெற்றுத் தோன்றுவதாகிய இவ்வழகிய கோலமுடையதாகப் புனைந்துகொண்டான் எ-று-

சிலம்பு அடியாள் - மலையின்வழிவந்தவள்; மலையரசன் மகள். சிலம்பு அடி—சிலம்பணிந்த திருவடி. செவ்வரத்தம்... செம்பஞ்சு; மகளிர் காலில் பூசப்பெறும் செந்நிரமுடைய குழம்பு. முதிராமதியான் என்றும் முதுமை நிலை யடையாத இளம்பிறையை அணிந்தவன். இத் தொடர் நிரம்பாத அறிவுடையான் என வேறொரு பொருளுந் தோன்ற நின்றமையுணர்க. முதிராமதியான் ஆதலின் முடிதாழ்த்து வணங்கி இத்தகைய கோலத்தைச் செய்துகொண்டான் என்பது ஒரு நயம். காம நுகர்ச்சி யில்லாத இறைவன் உமாதேவியாரது ஊடலைத் தணிவித்தல் வேண்டி அவருடைய திருவடியில் முடிதோய வணங்கினான்;