பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

யானை மீது அமர்ந்துகொண்டு, களத்திலிருந்து திரும்பி விட்டார்.

அவர் திரும்பிச் செல்வதை அறிந்த அலெக்சாந்தர், அந்த வீரரின் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்று கருதி, அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு அம்பி மன்னனை அனுப்பினான். அந்நியனைச் சரணடைந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த அம்பியின் அழைப்பை அவர் பொருட்படுத்தவில்லை. பின்னர், அலெக்சாந்தரின் படை அதிகாரிகளில் ஒருவன், தம் மன்னனின் செய்தியைப் போய்த் தெரிவித்த பின்னரே, அவர் திரும்பி வந்தார்.

அப்பொழுதுதான் கிழக்கும் மேற்கும் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு மீட்டருக்குமேல் உயர்ந்திருந்த இந்திய வீரர் போரஸும் நடுத்தர உயரமுள்ள யவன வீரன் அலெக்சாந்தரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வீரன் பெருமையை வீரனே அறிவான். நீர் வேட்கையாயிருந்த போரஸுக்கு முதலில் நீர் அளிக்கப் பெற்றது. அவரது வீரத் திருவுருவையும், தோல்வியுற்றுத் திரும்பிய காலையிலும் துளங்காத உறுதியைக் கண்டு அலெக்சாந்தர், "எங்த வகையில் நான் உம்மை நடத்தவேண்டும் என விரும்புகிறீர் ?" என்று வினவினான்.

அந்தச் சொற்களை அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போரஸ், "ஓர் அரசரைப் போல..." என்று கூறினார்.

'சரி, உங்களுக்கு வேறு விருப்பம் ஏதாவது உண்டா?'