பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

யானை வீரரும், 20,000 குதிரை வீரரும், 2,000 தேர்களும் இருந்தனர் என்றும், ஆனால் அந்த மன்னனிடம் மக்களுக்கு அன்பு இல்லை என்றும் அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திரகுப்தர் சாணக்கியருடன் வடதிசை சென்று அலெக்சாந்தரைக் கண்டு பேசியதாகவும் சில வரலாறுகள் கூறும். தாய் நாடு திரும்ப வேண்டும் என்று முன்னரே துடித்துக் கொண்டிருந்த யவனப் போர் வீரர்கள், நந்த மன்னனிடம் அமைந்திருந்த சேனைகளைப் பற்றி அறிந்திருந்ததால், மேலும் கலவரமடைந்திருப்பார்கள். எனவே, கி. மு. 325 இறுதியில் அலெக்சாந்தர் திரும்பிச் செல்லவே தீர்மானித்தான்.

பாரசீகத்தின் வழியாகச் செல்லும் பொழுது தன் ஆதிக்கத்திலிருந்த ஆசிய மக்களையும் ஐரோப்பியரையும் இணைத்து வைப்பதற்குரிய பல திட்டங்களைப் பற்றி அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். யவன வீரர்கள் பலர் பாரசீகப் பெண்களை மணந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்தான். பின்னர், பாபிலோன் நகருக்குச் சென்ற சமயம், கி மு. 323, ஜூன் மாதத்தில் அவன் நோயுற்று, திடீரென்று அங்கேயே உயிர் நீத்தான். அப்பொழுது அவனுடைய வயது முப்பத்து மூன்று கூட முற்றுப் பெறவில்லை. தன்னுடைய தனியாட்சிக்குப் பாபிலோன் நகரையே புதுப்பித்துத் தலைநகராக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை.

அலெக்சாந்தர் இறந்த சமயம் அவனுடன் இருந்த எகிப்திய மன்னன் தாலமியும், தளபதி-