பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கடற்கரையில் கோதாவரி ஆற்றுக்கும் மகாநதிக்கும் இடையிலிருந்த காடுகள் அடர்ந்த கலிங்கமும் மகத சாம்ராச்சியத்திற்கு வெளியிலிருந்தன. தெற்கே இருந்த சோழ, பாண்டியர்களுடன் அசோகர் நெருங்கிய அன்புத் தொடர்பு கொண்டிருந்தார் என்பது அவருடைய கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. ஆனால், கலிங்கம், ஒரு பக்கத்தில் கடல் இருந்த போதிலும், மற்றைப் பக்கங்களிலெல்லாம் மகதப் பேரரசை ஒட்டியிருந்தது பிந்து சாரருக்குப் பின்னர்க் கலிங்க மன்னர் பேரரசுத் தொடர்பையே முழுதும் அறுத்துக் கொண்டிருக்கவும் கூடும். எனவே அசோகர் பெரும்படையுடன் கலிங்கத்தை வெல்வதற்காகப் படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. இப்போரே அவரது கன்னிப் போராகவும் அவரது இறுதிப் போராகவும் விளங்கியது.

இப்பொழுது ஒரிஸா என்று அழைக்கப்பெறும் கலிங்கம் கடலரண், மலையரண், கானரண் ஆகியவற்றைப் பெற்றது. கலிங்க மக்களும், மன்னரும் பெரும் வீரர்களாக இருந்தனர். அவர்கள் 'வேலாலும் வில்லாலும் வேலி கோலி' நின்ற அரணே அந்நாட்டின் நான்காவது அரணாக விளங்கியது. அவர்கள் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவில் இருந்ததால் தொன்று தொட்டே அவர்கள் இருபுறத்திலிருந்தும் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தனர். சில சமயங்களில் அவர்களும் படையெடுத்துச் சென்று தாக்கியிருக்கின்றனர். சந்திரகுப்தருக்கு முன், அவருடைய பாட்டனார் மெளரியர் மகத இராச்சியத்தில் நந்தர்களிடம்