பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

அக்காலத்தில் பெருஞ் சாலைகள் பல அமைக்கப்பட்டன. பாடலிபுரத்திலிருந்து, தட்சசீலத்தின் வழியாக, சிந்துநதி வரை மிகப் பெரிய சாலை ஒன்று அமைந்திருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கப் பெற்றன. தொலைவு தெரிவதற்காக ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு தூண் வீதம் நிறுத்தப்பட்டிருந்தது. தூணுக்கு அருகில் ஒரு கிணறும், வழியில் பிரயாணிகள் தங்குவதற்கு வேண்டிய விடுதிகளும், கொட்டகைகளும் அமைக்கப்பட்டன. வேறு பல சாலைகளும் செம்மையான முறையில் அமைந்திருந்ததாலேயே அரச காரியங்கள் விரைவாகவும் செம்மையாகவும் நிறைவேற வாய்ப்பு இருந்தது.

அரசாங்க வருவாயில் இன்றியமையாத ஒரு பகுதி நிலவரி. மற்றும் வாணிகம், பொருள்கள் முதலியவற்றிற்கும் வரிகள் வாங்கப்பட்டன. செலவுகளில் இன்றியமையாதவை அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள், இராணுவத்திற்கான செலவு, பொதுத்துறைப் பணிக்காக ஒதுக்கப் பெற்ற தொகைகள் ஆகியவை. பேரரசின் குடும்பத்திற்காக வருவாயில் ஒரு சிறு பகுதியே பயன்பட்டிருக்கும். ஏனெனில், அவருக்கென்று தனி நிலங்கள் பல இருந்தன.

வலிமை மிக்க பேரரசு ஏற்பட்டதிலிருந்து சமுதாய நிலையிலும் அதற்கேற்ற மாறுதல்கள் ஏற்பட்டன. பயிர்த்தொழிலும் கைத்தொழில்களும் பெருகியதுடன், வாணிகமும் செழிப்படைந்தது தொழில்கள் தனித்தனிச் சங்கங்களாக அமைந்-