பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


கொடுமையைப் போக்கினார். அசோகரின் அன்பு நெறி காரணமாக அவர் காலத்தில் மாமிச உணவு உண்டவர்களும் மரக்கறி உணவை உண்ணலானார்கள்.

‘அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே’

என்பது தாயுமானவரின் வாக்கு. அவ்வாக்கிற்கிணங்க அசோகர் தம் நாட்டுக் குடிமக்களின் பொதுநலப் பணிகளில் பேரார்வம் காட்டிவந்தார். அவரது அறப்பணியால் நாடெங்கும் சாலைகள் அமைந்தன; சோலைகள் தழைத்தன; நீர் நிலைகள் தோன்றின; மருத்துவ நிலையங்கள் மலர்ந்தன; கல்வி நிலையங்கள் ஏற்பட்டன; பெண் கல்வியும் எங்கும் தழைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அசோகர் என்றும் தற் பெருமை கொண்டதில்லை. பெரிய நிலப்பரப்பை ஆளும் பேரரசராக இருந்த போதிலும் அவர் தம்மைப் பேரரசர் என்று கூறிக் கொண்டதேயில்லை. ‘தேவர்களுக்கு உகந்த பிரியதரிசி மன்னர்’ என்றே தம்மைப் பலவிடங்களிலும் கூறிக்கொள்வார்.

அசோகர் பௌத்த சமயத்தவராயினும் எந்தச் சமயத்தவரிடமும் வெறுப்புக் கொண்டதில்லை. ஒருவர் தம் சொந்த சமயத்தைப் புகழ்வதற்காக மற்றொருவர் சமயத்தைக் குறைகூறுவது தவறு என்று அசோகர் கருதினார். எல்லாச் சமயங்களின் சமரசமே மேலானது என்று அனைவருக்கும் அறிவுரை கூறினார். அவர் காலத்தே பலவகை சமயத்தினரும் ஒன்றுபட்ட உள்ளத்துடன் அன்புற்று இன்புற்று வாழ்ந்து வந்தனர்.