பக்கம்:அலைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 O லா. ச. ராமாமிருதம்

 பேர் கட்டிப் பிடிக்கிறார்கள். சமாளிக்க முடியவில்லை. எனக்கு அடிவயிற்றை திருகிற்று, கைகால்கள் வெல வெலத்தன. அங்கே ஒரு வீட்டுச் சுவர் மேல் சாய்ந்து கொண்டேன். இல்லாவிடில் விழுந்திருப்பேன்.

என்னை கண்டதும் அம்மா லொங்கு லொங்கென்று ஓடி வந்தாள்.

"அபிதா வாயில் மண்ணைப் போட்டுட்டாடா!"

நான் அந்த வீட்டுப் பக்கமே போகவில்லை. நான் பயந்தாங்கொள்ளிதான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காட்டுத் தீயைக் குடத்து நீரால் அணைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அதை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.

மாமி அபிதாவை அணைத்துக்கொண்டு அவளைத் துக்கவே விடவில்லையாம். அதனால் மாமியை அபிதாவிடமிருந்து பிரித்து, அறையுள் தள்ளிப் பூட்டிவிட்டார்கள்.

நான் ராப்பூராத் தூங்கவில்லை. மாமி கதவை ஆட்டி உடைக்கும் சப்தம் என் மார்பில் சுத்திபோல் இடிக்கிறது. வாத்தியார் வீடு எங்கள் வீட்டுப் பின்புறத்துத் தெருவில் தான். ஒரு மாதமாகியும் நான் அங்கே போகவில்லை.

ஒரு நாள் மாலை, நான் எங்கோ போய்க்கொண்டிருக்கையில் மாமி எதிர்ப்பட்டாள். மாமிதானா அது? முதலில் பெண் சொரூபந்தானா அது?

எலும்புக் கூடாய்த் தேய்ந்துபோய்; நெற்றிப் பொட்டும் கண்ணும் கன்னமும் குழி விழுந்து-இல்லை. குகை விழுந்து மூக்கு கழுகாய் நீண்டு, தலை சடைபிடித்து, உடலில் துணி போன இடம் தெரியாமல்...

என்னைக் கண்டதும் அது, மடியுள் எதையோ இழுத்து மறைத்துக் கொண்டது. குண்டக்கனல்போல் கண் குழிகள் காங்கை வீசின.

"ஏண்டாப்பா?" -தொண்டையில் எட்டுக் குரல்கள் நொறுங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/142&oldid=1288530" இலிருந்து மீள்விக்கப்பட்டது