பக்கம்:அலைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தபஸ் O 15

 “குருக்கள்ய்யாவுக்கு ரொம்பக் கோபம் வருதே!-”

‘இல்லை கோபம் வராது. சுவாமி கைங்கர்யத்தில் உனக்கு இருக்கும் சிரத்தைக்கு, உன்னைக் கட்டியனணத்துக் கொஞ்சணுமாக்கும்-’’

அவன் முகத்தில் தோன்றிய புன்னகை எனக்குக் கரிப்பெடுத்தது.

“'என்னையேன் கொஞ்சணுங்க? மாதவிவம்மாளைக் கொஞ்சுங்க......”*

அவன் கன்னத்தில் சுழற்றி ஒரு அறை விட்டேன்.

"மரியாதை கெட்ட நாயே, என்ன குடித்துவிட்டு வந்திருக்கியா? உன்னைத் தொட்டதற்கு நான் மறுபடியும் ஸ்னானம் வேறு பண்ணவேண்டியிருக்கு-’’

அவன் அப்படியே கீழே சாய்ந்தான். அவனுக்கு ஆத்திரம் மூண்டுவிட்டது. இருந்தாலும் கோவில் குருக்கள் மேல் கைவைக்க முடியுமா? ஆனால் அடியைப் பட்டுக் கொண்டும் வாய் சும்மா இல்லை.

“'உங்களுக்கு அந்த மாதவியம்மாளைக் கொஞ்சறதுக்கு முறையிருக்குதுங்க...”

அவன் விலாவில் காலாலேயே உதைத்தேன்.

வயிற்றைக் கெட்டியாய்க் கையால் பிடித்துக்கொண்டு, “நிசமாத்தான். உங்க பெண்சாதிங்க!-" என்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினான். என் வெறி சட்டென விட்டது.

இடி விழுவதென்றால் இப்படித்தானா? தலை சுற்றிற்று. மடேரென்று கீழே விழுந்துவிட்டேனேன்றே நினைக்கிறேன், நான் கிணற்றுள் விழாதபடி, நான் உதைத்தவனே என்னைத் தாங்கினான்.

என் அகமுடையாள் செத்துப்போனாள் என்று அம்மா சொன்ன அர்த்தம் இப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/17&oldid=1285371" இலிருந்து மீள்விக்கப்பட்டது