பக்கம்:அலைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16 இ லா. சா. ராமாமிருதம்
 


உண்மையை அப்பவே அம்மா சொல்லியிருந்தால்!... ஒரே தடவை நஞ்சைக் கொடுத்தால் ஒருவழியாய் காயம் மடிந்து போகும். கொஞ்சம் கொஞ்சமாகப் பிரயோகம் செய்வதால் நெஞ்சு, உடல் எல்லாம் நஞ்சாகி விடுகிறது. என் ஆசையின் அஸ்தியிலிருந்து உருவான பிண்டம் கோர ஸ்வரூபமாய்த் தாண்டவமாடியது. அது ஆடிய ஆட்டத்தில், என் வயிறும் குடலும் குமட்டிற்று தழல் புழுப்போல் என் மூளையில் நெளிவது எனக்குத் தெரிகிறது.

என் மண்டை யெரிச்சலைத் தணித்துக்கொள்ள, ஒரு குடம் தண்ணீரைத் தலையில் கொட்டிக்கொண்டு, சொட்டச் சொட்டப் போய் அம்மன் சன்னதியில் நின்றேன்.

என் முதல் அடைக்கலமும் கடைசி அடைக்கலமும் அவள்தான்.

"தேவி, உனக்கு இது அடுக்கிறதா?’’

அவள் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

மாலை பூஜை நேரம், அம்மனின் ஆடையைக் களைந்தேன்.

கர்ப்ப க்ருகத்தில், மேல் கொக்கியிலிருந்து தொங்கும் அகண்டம் ஆடிற்று. சுடர் சற்று மங்கியது. தூண்டினேன், குதித்தது.

"ஹா!"

என்ன அற்புதமான அழகு! கல்லைப்போன்ற முலைளும், குறுகிய இடையினின்று சரிந்தாற்போலேயே அகன்ற வயிறும் உடனே அகன்ற இடுப்பும் அடிவயிற்றில் தொப்புளும்-

"அம்பா! இத்தனை நாளாய் உன்னை நான் இப்படிக் கண்டதுண்டோ?’’

அவள் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

அவளுடைய அபயஹஸ்தம் என்னை வாவென்று அழைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/18&oldid=1120764" இருந்து மீள்விக்கப்பட்டது