பக்கம்:அலைகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74 இ. லா. ச. ராமாமிருதம்
 

 “உங்களுக்கெல்லாம் கேலியாய்த் தானிருக்கும்; அப்படி நான் கேலியாய் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகிறேன், அவ்வளவுதானே! ஆனால் எதையும் தாங்கிக்கற மனசு எனக்கில்லை. உங்களோடு என்னைக் கூட்டி வழியனுப்புகையில் கூட அப்பா என்ன சொன்னார்?’’

புருவங்கள் மறுபடியும் சிலிர்த்துக் கொண்டன.

“ஒண்ணுமே தெரியாத மாதிரி வேஷம் போட வேண்டாம். என் வாயாலேயே வரணும் என்று உங்களுக்கு எண்ணம் இருக்கிறாற் போலிருக்கிறது. இருக்கட்டுமே! அதனாலும்தான் என்ன, உள்ளததைத் தானே சொல்றேன்! ஆனால் அப்பா என்னமோ கிண்டலாய்த் தான் சொன்னார். 'மாப்பிள்ளைவாள், என் பெண்ணிடம் சோகமான கதைப் புத்தகம் ஏதேனும் தப்பித் தவறிக்கூட கொடுத்துவிடாதேயுங்கள். படித்துக் கொண்டு அழுது கொண்டேயிருப்பாள்; உங்களுக்கு வேளைக்குச் சாப்பாடு கிடைக்காது. நேரமாகி விட்டதேயென்று நீங்கள் சாப்பிடாமல் போய்விட்டால், அதையும் சேர்த்து அழுது கொண்டிருப்பாள். வெயிலிலோ மழையிலோ, தப்பித் தவறிக்கூட அவளோடு வெளியே கிளம்பி விடாதீர்கள். கூடவேதான் வருகிறாள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்; ஆனால் திரும்பிப் பார்த்தால் வெய்யிலில் வெண்ணெயாய் உருகிப் போயிருப்பாள்; மழையில் மண்ணாய்க் கரைந்து போயிருப்பாள் அவள் உடல் நிலையை நான் சொல்லவில்லை; என் பெண்ணுக்கு மனசு எவ்வளவு உறுதி என்று சொல்ல வருகிறேன். நான் என்னவோ ஸார், அவளைச் செல்லமாய் வளர்க்கவில்லை. ஐந்து பெண்களைப் பெற்றுவிட்டு யாருக்குச் செல்லம் கொடுக்க எனக்குக் கட்டுப்படி யாகும்? ஏதோ மண்ணையும் புல்லையும் போட்டு வளர்த்தேன். அதையும் போட்டு ஏன் வளர்த்தாய் என்று தான் எல்லாரையும் வளர்த்திருக்கிறேன் என்றாலும் இவள் மாத்திரம் அப்படியிருக்கிறாள்; நான் என்ன பண்ணுவேன்! நான் என் பெண்ணுக்குச் சிபாரி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/76&oldid=1142488" இருந்து மீள்விக்கப்பட்டது