பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூரசம்ஹாரம் ❖ 153


 இடுப்பிலிருந்து முழங்கால் வரையில், சற்று இறுகலாகவே தைத்த பட்டு நிஜார், இடுப்பில் சதங்கை, கால்களில் சிலம்பு, தலையில்-முன்னால் சரிகைப் பட்டை தெரியக் கட்டிய-சிவப்புத் தலைப்பாகை. காதில் இரத்தச் சொட்டுகள் போன்ற கடுக்கன். மைதீட்டி விசாலித்த கண்கள். நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு. மார்பில் பூணூல் (எத்தனை வடமோ?). அதன் மேல் இரு பக்கமும் குறுக்கே தரித்த காஞ்சீபுரத்து விசிறி மடிப்பு சரிகை அங்கவஸ்திரம். அவரவர் கழுத்தில், அவரவர் தாய்மாரின் நகையோ, தாரமாரின் நகையோ ஒவ்வொருவர் கையிலும், உயரத் தூக்கி எதிரே பிடித்த உருவிய கத்தி. அதன் நுனியில் சொருகியதோர் எலுமிச்சம் பழம். முன்னால் கொட்டு முழக்கு: பின்னால் கோவில் குடை-இத்தகைய சின்னங்களுடன், ஊர்வலத்தில் ஒருவர், குமரேச சதகத்திலிருந்தோ, திருப்புகழிலிருந்தோ, அல்லது ஸ்வய கவியாகவோ பாட, ஒவ்வொரு அடிக்கும், "சபாஷ்! சபாஷ்!" என்று நெஞ்சு நரம்பு புடைக்கக் கத்திக் கொண்டு வரும் அந்நவ வீரரின் காட்சி மிகவும் உணர்ச்சி நிறைந்தேயிருந்தது.

ஊர்வலம் பிள்ளையார் கோயில் சந்து முனை திரும்பிற்று. உண்ணாமலை, கண் ஜாடையும், கை ஜாடையுமா, உடம்பையே ஆட்டி, மைந்தனைச் சைகை செய்து அழைத்தாள். சக்தி வேல், தாயின் சேஷ்டைகளைக் கண்டு, சற்றுச் சலிப்புடன், ஊர்வலத்தை விட்டுப் பிரிந்து, அவளிடம் வந்தான்.

"என்னாம்மா?"

"ஏண்டா கொயந்தே, காலெல்லாம் நோவ நோவ, தெருவெல்லாம் சுத்தறையே. களைச்சுப் பூடுவியேன்னூட்டு, காப்பித் தண்ணி காய்ச்சிக் கொண்ணாந்திருக்கேன். இந்தா குடி!" என்று செம்பை நீட்டினாள்.