பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 85


ஆனால் அவர்கள் மறந்து விடுவார்கள். குழந்தையும் மறந்து
விடுவாள். நாம் பரஸ்பரம் உபயோகப்படுத்தப்படத்தானே
இருக்கோம்!

இருந்தாலும் பாப்பூ மாதிரி பாப்பா பார்ப்பது அரிது
தான். அது குழந்தையாகப் படவில்லை. ஏதோ அவதாரம்.
வயதுக்கு மீறின அறிவு. அதே சமயம் வெம்பல் இல்லை.
சொப்புப் போன்ற உருவம். ரெண்டு வயசுக்கு எப்படிக்
கொழகொழன்னு இருக்கணும்! சிறு கூடாய், தந்த விக்ரஹத்
தில் காணும் சிற்ப நுணுக்கங்கள் போன்ற முக, அங்க
லக்ஷணங்கள். கட்டை மயிர் செழிப்பாய் வழிந்து, ஃப்ரேம்
போட்டாற் போன்ற முகம்.

குடிவந்த அடுத்தநாளே, காலையில் அப்பாவும்
பெண்ணும்-அவர் கைவிரலை அவள் பிடித்துக்கொண்டு
அவள் வீட்டைத் தாண்டி எங்கோ போய்க் கொண்டிருக்கை
யில் காற்று வாக்கில் அவர்கள் பேச்சு மிதந்து வந்தது.

“இது என்ன செடி, டாடி?”

“ஒ, இது இங்கு இருக்கா? இதன் பேர் தொட்டால்
சிணுங்கி. பாப்பூ இப்ப பார் ஒரு வேடிக்கை. இதைத் தொடு.
உடனே மூஞ்சியைத் தொங்கிக்கும்.”

“கோவிச்சுண்டா?”

“சரி, அப்பிடித்தான் வெச்சுக்கோயேன்! அம்மாவோ
நானோ கோவிச்சுண்டா, நீ வெச்சுக்கறையே, அதுமாதிரி!
தொட்டுத்தான் பாரேன்!”

கையைத் தூக்கிவிட்ட குழந்தை சற்று யோசித்துவிட்டு
“வேண்டாம்பா, அதை டிஸ்டப் பண்ண வேண்டாம், அது
தூங்கட்டும்.”

அவர்கள் போய்விட்டார்கள், வஸூ அசந்து போனாள்.