பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாப்பூ ❖ 87


முகத்தில் அடித்த வெயில்தான் அவளை எழுப்பிற்று.
“அட, இவ்வளவு நாழி ஆயிடுத்தா என்ன? கீழே இறங்கிப்
போனாள். ஃபில்டரிலே இறங்கி டிகாக்ஷனும் பாலும்
பாதிக்குமேல் காலியாகியிருந்தன. தன் காபியைக் கலந்து
கொண்டு, தம்ளருடன் ஹாலுக்கு வந்த போது ஸ்வேதா
வும் விருந்தாளியும் பேசிக் கொண்டிருந்தனர். அவளைக்
கண்டதும் ஸ்வேதா, “வ்யாஸ், மீட் மை ஒய்ஃப் வஸூதா.”

வ்யாஸ் எழுந்து நின்று கைகூப்பினான். முகக்ஷவரமும்
ஸ்னானமும் உடைமாற்றமும் (ஸ்வேதாவுடையது) இத்தனை
மாற்றம் தருமா என்ன? ஆனால் இந்த ஆளிடம் ஏதோ
சரியில்லை. வரைந்த உருவக் கோடை எச்சிலைத் தொட்டு
அழித்த மாதிரி, எப்படியோ கசங்கியிருந்தான். ஒருவிதமான
அநிச்சயம், எந்த சாக்கில் கரைந்து காணாமலே போய்
விடுவானோ? சோகம் அவனை மேகம் சூழ்ந்திருந்தது.

“வஸூ, வ்யாஸூம் நானும் காலேஜிலிருந்து நண்பர்கள்.
வ்யாஸ் இவனுக்கு இட்ட பேர் இல்லை.”-ஸ்வேதா
சிரித்தான். “எங்கள் பால்யத்தில் நாராயண் ராவ் வ்யாஸ்னு
ஒரு சங்கீத விதூஷக்; படா மவுஸ். அவனுடைய கிராம
ஃபோன் ரிக்கார்டுகள் அந்த நாளில் ஹாட் கேக்ஸ். அருமை
யான குரல். கொஞ்சம் பெண் கலந்திருக்கும். பிர்க்காவைக்
கொட்டுவான் பாரு.” ஸ்வேதா சிலிர்த்துக் கொண்டான்.
“அடேயப்பா! அத்தனையும் மத்தாப்பு-விதவிதமாய்க் கலர்
பூ, நக்ஷத்திரங்கள். இவன் தன் ஸ்வயப் பேரை ‘வ்யாஸ்'னு
மாத்திண்டான்னா வ்யாஸ் சங்கீதத்தில் இவனுக்கு
எவ்வளவு மோகம் இருக்கணும் பார்.”

புன்னகை புரிந்தாள்; “எனக்கு சங்கீதத்தில் உங்க
ரெண்டு பேர் மாதிரி அத்தனை ஈடுபாடு கிடையாது.
உங்களுக்கே தெரிஞ்ச விஷயம். கலியாணப் பாட்டோடு
சரி. நீங்கள் பெண் பார்க்க வந்தபோது என் பாட்டில்