பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அலை தந்த ஆறுதல்

முன்னைய உயிர்களின் குணம் வாய்க்காது என்பதற்காகவே அவருக்கு டி. எஸ்சி, (D.Sc.,) பட்டம் வழங்கப் பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்த விஸ்வாமித்திரன் தன் கம்பெனியின் முதலாளி என்பதை மட்டும் அறிகிறாள். ஏனென்றால் உண்மையென்ற ஊற்றுநீர் ஊசிக் கண் போன்ற இடைவெளிகளின் வழியாகவும் கசியத்தானே செய்யும். ஆனால் அவள் சொல்லவில்லை.

ஆராய்ச்சியின்போது காதலன் என்ற போர்வையில் ஒரு காமுகன் வந்தான். தன்னிடமிருந்து செய்திகளைக் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினானேயன்றி துாய்மையான காதல் அவனிடம் இல்லை. அதனையும் ஒப்புக் கொண்டான். தான் நடந்துகொண்ட முறைக்காக வருந்தினான். வாழ்க்கையின் குறுக்குச் சாலைகளை உணர்ந்தவன் பல படிகள் ஏறி உயர்ந்துவிட்டான். நிர்மலாவிற்குமுன் அவன் ஒர் ஊர்க்குருவியே! எனவே தான் தற்கால துஷ்யந்தனைப் போல மறந்தவன் போல் நடித்து எங்கோ வாழ்கிறான். அவனுக்கே தன்னையளித்து விட்ட நிர்மலாவால் வேறு ஒருவரை நினைக்கக் கூட முடியவில்லை. வெறுப்பு ஏற்பட்டு என்றோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் அவள். பாரதியின் பாடல்களைப் படித்து மனவலிமை பெற்றுப் புதுமைப் பெண்ணாய்ப் பொலிவோடு காட்சியளிக்கின்றாள். சமுதாயத்திற்கு அவள் ஒரு பச்சை விளக்கு. சிறுமை கண்டு பொங்கும் அந்த நிர்வாக நிர்மலா ஒரு நிஜம். பல நிழல்கள் அவளிடம் நெருங்க முடியவில்லை. ஏனெனில் அவள் ஒரு மஞ்சள்பாஸ்பரம். கடவுள் நிர்வாகத்தின் கருத்துள்ள அறிவு ஜீவி நிர்மலா என்பதை மறுக்கமுடியாது. அவளுக்கு என்றுமே ஏறாற்றம் இல்லை; எதிர்பார்ப்புகள் இல்லாததால்!