பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. டீன் ஏஜ் என்றால் என்ன?


முடியும் என்று முயற்சிப்பவன், மனிதன் என்ற பெயருக்கும் மரியாதைக்கும் உரியவன்.

முடியாது என்று மயங்குகிறவன், ஓரம்போய் ஒதுங்குகிறவன். இயலாத முடம் இயற்கையில் ஜடம்.

உங்களை தீபம் என்று தெளிவுடன்தான் அழைக்கிறேன். இளைஞர்களை தீபம் என்று அழைப்பதில் ஓர் அற்புதமான அத்தம் இருக்கிறது.

தீ, தீச்சுடர், தீப்பந்தம், தீக்கதிர் என்று பல சொற்கள்.

அக்கினிக் குஞ்சு என்று அழகாகப் பாடுவார் பாரதியார்.

தீச்சுடருக்கும் தீப்பந்தத்திற்கும் நிறைய வேற்றுமை உண்டு.

தீச்சடரை ரசிப்பார்கள். தீப்பந்தம் என்றால் அது, தீமை பயக்கும் என்று வெறுப்பார்கள். விலகுவார்கள்.

விளக்கு என்றால், வெளிச்சம் தருவதால் வரவேற்பார்கள். ஏற்றி வைக்க இசைவார்கள். பயன்படுத்திக் கொள்வார்கள்.

இருக்கின்ற இருளை அகற்றிவிட, அகல் விளக்கு என்று மாடத்தில் கூடத்தில், வைப்பார்கள்.

தீபம் என்று கூறியவுடன் மனதிலே ஒரு சிலிர்ப்பு: சிந்தனையில் ஒரு புத்துணர்வு, சிரம் தாழ்த்த விழையும் மன உணர்வு. கரம் குவித்து, கண்மூடி நின்று தியானித்து, திவ்யமாக வணங்கும் காரியங்கள்.

தீபம் என்பதற்கு மட்டும் ஏன் இந்த தெய்வீக வரவேற்பு கிடைக்கிறது?