பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அவமானமா? அஞ்சாதே


பலவிதமான காலத்தையும் கோலத்தையும் படைத்து விடுகின்றது.

அந்த இயற்கைக் காலம்போலவே, மனித தேகத்திற்குள்ளும் செயற்கைக் காலம் புகுந்து, தேகத்தின் கோலத்தைக் கூட்டி விடுகிறது. ஒட்டி விடுகிறது.

எனவே மனிதருக்கான காலம் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

1. பொற்காலம்: (பொன் + காலம்)

மக்களுக்குப் பொற்காலம் என்பது ஒவ்வொருவரின் மனோநிலைக்கேற்ப மாறுபடும். அவரவர் அறிவுக்கேற்ப, ஆற்றுகின்ற செயலுக்கேற்ப, கூறுகின்ற கொள்கைக்கேற்ப மாறுபடும்.

அவையெல்லாம் வாதத்திற்கு உதவாது. வாக்கு வாதமும் பிடிவாதமும் வாழ்க்கையை சீரழிக்கும் கொடிய வியாதிகள்.

துன்பமும், துயரமும், நலிவும், மெலிவும், ஏக்கமும், தாக்கமும், வரவும், செலவும், பதட்டமும், படபடப்பும் அற்ற ஒரு வாழ்க்கை எங்கே இருக்கிறதோ அங்கேதான் பொற்காலம் இருக்கும், சிரிக்கும்.

மண்ணில் பிறந்த எந்த மனிதருக்கும் இந்த நிலை அமைய வாய்ப்பில்லை. அமைந்திருக்கிறது என்று யாராவது சொன்னால், அவர்கள் மனமறிந்து பொய் சொல்கிற மயக்குட் பேர்வழிகள் ஆவர்.

எந்த அரட்டலுக்கும் மிரட்டலுக்கும் பணியாத ஓரிடம் எந்த பஞ்சத்திற்கும் பசித்தாக்குதலுக்கும் பயப்படாத ஓரிடம் இடி மழை என்றோ, நோய் நொடி என்றோ கலங்காமல் அமைதியாகக் கழிக்கும் ஒரு சொர்க்க பூமி உண்டு. அது எது தெரியுமா?

அதுதான் தாயின் கர்ப்பப்பையாகும்.