பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

73



அங்கே குடியிருக்கிற பத்து மாதங்களும் ஒருவருக்குப் பொற்காலம் பெண் வயிற்றுக்குள் இருக்கும்வரை தான் இந்தப் பொற்காலம் நீடிக்கிறது.

மண் மடிக்கு வந்து விழுந்துவிட்ட உடனேயே, பொற்காலம் புறப்பட்டுப் போய்விடுகிறது. இனி, கருப்பை ஊருக்குப் போகும் காலம்தான் பொற்காலம். (பத்துமாத காலம் மட்டும்).

2. நற்காலம்: (நல் + காலம்)

பொற்கால உலகிலிருந்து பூமியைப் பார்த்துவிட்ட குழந்தைக்கு ஏற்படுகிற காலம்தான் நற்காலம்.

இன்றைய காலத்துப் பெண் குழந்தைகள் சிலருக்கு இந்த நற்காலம் கூட அமையவில்லை என்பது உண்மைதான் என்றாலும், பொதுவாக, குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்க்கையில் நற்காலம் பிறப்பதும் உண்மைதான்.

குழந்தைகள் யார் பார்த்தாலும் கொஞ்சி மகிழ்வதும், பாராட்டிப் பேசுவதும், ஒவ்வொரு செயற்கையை ரசிப்பதும் நற்காலம்தானே!

நடக்கத் தெரிகிற வரையிலும், நான்கு வார்த்தை பேச இயலுகிற வரையிலும் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். கடவுளுக்கு இணையாகப் பேசப்படும் உயர்ந்த நிலை. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி அல்லவா? (பிறந்தது முதல் 6 வயது வரை).

3. கற்காலம்: (கல் + காலம்)

நற்காலம் முடிகிற வயதில் கற்காலம் வந்துவிடுகிறது. கல் + காலம் = கற்காலம்.

கற்களை வீசி மகிழும் வயது கண்டதையெல்லாம் எடுத்தெறிந்து இன்பம் காணுகிற மனது. அதோடு பள்ளிக் கூடத்தில் கொண்டு போய் தள்ளி விடுவதால், கற்கின்ற காலமாகவும் ஆகிவிடுகிறது.