பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16. ஆவலும் கூவலும்


“என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்” என்ற ஒரு சினிமாப் பாடலை பாடியே இளைஞர்கள் தங்களை மறந்துவிட்டார்கள். இழந்து விட்டார்கள்.

தன்னைத் தேட வேண்டும் என்று இங்கே கூறுகிறோம். இன்னொருவர் இடத்திலே அது இருக்கிறது என்றால் கேட்பதற்கே கேவலமாக இல்லையா!

தன் ஆயுதமும் தன்கைப் பொருளும்
பிறர்கை கொடுக்கும் பேதையும் பதரே!

என்ற பாட்டையும் இப்போது நாம் பாடியாக வேண்டும்.

தன்னுடைய ஆயுதத்தை பொருளை, பிறர் கையில் கொடுத்துவிட்டு பேதலித்து நிற்பவர் பேதை என்றால், தன் இதயத்தை எண்ணும் சக்தியை இன்னொருவரிடம் தந்துவிட்டு ஏமாந்த இளிச்சவாயர்களாக வாழ்வது. எத்தனை ஏமாளித்தனமாக இருக்கிறது!

உன்னை எதற்குத் தேடுவது?

நீ நீயாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தேடல், தெளிதல்,

ஆனால் உனது ஆவல் அடுத்தவர் பற்றியே இருக்கிறது. உன் வாயிலிருந்து வருவது வார்த்தையாக இல்லாமல்,கூவலாக இருக்கிறது. கூச்சலாக இருக்கிறது என்றால் நீ எந்த இனம் என்றுதானே கேட்கத் தோன்றும்.

ஒவ்வொரு மிருகமும் தனி இனம் என்பார்கள். ஏனென்றால் அதற்கெல்லாம் தனிக்குணம் இருப்பதால்தான். எறும்புக்கு உழைப்பு, காக்கைக்கு உறவு, கழுதைக்கு சுமை, நாய்க்கு நன்றி. புறாவுக்கு ஒழுக்கம், யானைக்கு வலிமை, ஆனால் மனிதனுக்கு எது என்றால் அது கலவையான சங்கதிகள்தான்.