பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அவமானமா? அஞ்சாதே!



நேரத்திற்கு நேரம் நிமிடத்திற்கு நிமிடம் தனது குணத்தை மாற்றிக் கொண்டு திரிகிற கூட்டம்தான் மனிதக்கூட்டம்

தனக்குத் தேவையென்றால் யாசிப்பார்கள். பூஜிப்பார்கள். தனக்குத் தேவையில்லை என்றால் யோசிப்பார்கள். வீசிப் போடுவார்கள். வேசித்தனமான குணாதிசயங்கள் கொண்ட வாழ்க்கை வெட்கங்கெட்ட வாழ்க்கை.

அதுவல்ல நாம் தேடுவது?

மனிதன் தெய்வ சாயலாகப் படைக்கப்பட்டான் என்று வேதங்கள் விவரிக்கின்றன. மதங்கள் போதிக்கின்றன.

தெய்வ சாயலைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். தெய்வத்திற்குரிய பண்புகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதைத் தேட வேண்டும். தெளிய வேண்டும்.

இதற்கு உங்கள் மனம்தான் ஒத்துழைக்க வேண்டும்.

வெள்ளத்தின் இயல்பு பள்ளத்தை நோக்கி ஓடுவது. உள்ளத்தின் இயல்பு கள்ளத்தில் உறவு கொள்வது என்று சித்தர்கள் சொல்வார்கள்.

ஓடுகிற நீரில் மிதந்து கொண்டு போவதும் தும்பும் செய்யும். தூசியும் செய்யும். செத்து மிதக்கும் சடலங்களும் செய்யும்.

போகிற போக்கில் போய்க் கொண்டேயிருப்பது வாழ்க்கை இல்லை. எங்கே போக வேண்டும்? எப்படிப் போக வேண்டும்? அந்தத் தேடலைத்தான் அறிவுத் தேடல் என்கிறோம்.

உன்னை நீ அறிந்தாயாகில் உனக்கொரு கேடும் இல்லை என்கிறது கைவல்ய நவநீதம்

உன்னிடம் உன்னைத் தேடுவது என்பது உயர்ந்த குணம் உயர்ந்தவர்களின் குணம்.

அந்த ஆவல்தான் உங்களுக்கு வேண்டும். அந்த ஆவலை ஏவிவிடும் உள்ளம் இருக்கிறதே அதைப் பக்குவப்படுத்திக் கொள்வதுதான் தெய்வீக மனிதரின் தேர்ந்த ஞானமாக இருக்க வேண்டும்.