பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. அவமானம் அவர்களுக்குத்தான், நமக்கல்ல!


தன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் அடுத்தவர் வீட்டில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டுக் காட்டுகின்ற எமகாதகத் திறமை எல்லா மக்களிடம் இருக்கின்றன.

தனக்குரிய திறமை என்ன? தகுதி என்ன? நிலைமை என்ன என்று தெரிந்து கொள்வதில் இல்லாத ஞானம், மற்றவர்களைப் பற்றிய முழு விவரங்களையும், மனப்பாடம் செய்து வைத்திருக்கும் மடத்தனமான மாண்பு, எல்லா மக்களிடமும் நிறைய இருக்கிறது.

என்ன செய்தால், எப்படி முயற்சித்தால் நாம் உயரலாம்! நம் வாழ்வு மேம்படலாம் என்று சிந்திப்பதை விட, என்ன செய்தால் அவன் வீழ்வான், தாழ்வான், தினம் தினம் சாவான் என்று திட்டம் போடுகிற ஜகஜால புரட்டர்கள், நிறைய பேர்கள் நாட்டிலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மனித வடிவிலே, பல விஷ ஜந்துகளின் மொத்த உருவமாக, பல மனிதர்கள் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை இனம் கண்டு கொண்டால், மனம் இந்தப் பாடுபடாது என்பது நிச்சயம்.

ஏனென்றால், அவர்கள் வேலை அவமானத்திற்கு நம்மை ஆளாக்குவது. நமது வேலை, தப்பித்துக் கொண்டு தேர்ச்சியுடன் முன்னேறுவது. இப்படியாக உங்கள் சிந்தனையும் செயலும் அற்புதமாக வெளிவரவேண்டும்.

புடம் போட்டு எடுத்த பொன்னுக்கு எத்தனை வேதனை?

சிலையாகிப் போன கல்லுக்கு எத்தனை அடி? கொத்து?