பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

"இடைவேளை நேரத்திலே என்னமோ கேட்டீங்க. இப்ப சொல்றேன்: உங்கள் கணவன் பேர் எதுவோ, அதுவேதான் என் கணவன் பேரும்!" என்றாள்.

எரிமலையின் பிளந்த வாயருகே தள்ளப்பட்டாள், ரேவதி. என்ன புது சோதனை இது? பெயரைக் கேட்டால் பெயரைச் சொல்லுவாளா?... விடுகதை போடுகிறாளே?

"அப்படிங்களா? அப்படின்னா, என் வீட்டுக்காரர் வச்சிருக்கிறது போலவே, உங்கள் வீட்டுக்காரரும் ஒரு 'செவர்லே' வண்டியை, ஊகூம், 'செவர்லேட்' வண்டியை வச்சிருக்கிறது தப்பு இல்லைதான்" என்று 'நைச்சியம்’ படித்தபடி நகர்ந்தாள், ரேவதி.

"ஆமா ஆமா!" என்று தலையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டாள், மந்தாகினி.

சாலை ஓரத்துக்கு வந்தது 'மாருதி’.

"முன்னாடி ஏறிக்கம்மா’’ என்றாள் ரேவதி.

குழலி ஏறிக்கொள்ளப் போனபோது-

அசுரத்தனமாகக் குறுக்கு வழியில் பாய்ந்து வந்து நின்றது, மஞ்சள் பூசிக் கொண்டிருந்த கார் ஒன்று. பழைய 'பியட்!'

அதிலிருந்து மந்தாகினி இறங்கினாள்.

“டாக்டரம்மா! என் காரை ஒட்டுகிற ஞானசீலன் தானுங்க எங்கள் வீட்டுக்காரர். இன்னும் நாலு நாளிலே நாங்கள் ஊட்டியிலே ஆப்பிள் சாப்பிடப் போறோமுங்க..." என்றவள் 'டாட்டா' என்று கூறி கைகளை விசியபடி மீண்டும் காரில் ஏறிக்கொண்டாள். காரும் நகர்ந்தது .

சிரிப்பதா , அழுவதா என்பது புரியாமல் போகவே, 'தெய்வமே’ என்று காரைக் கிளப்பினாள், ரேவதி.