பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


இன்னமும் இருந்துக்கிட்டு வர்றாங்க... என் பேச்சு சத்திய மானதுங்க, டாக்டரம்மா!...” கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டாள்.

"ஏன் இப்படி நீங்கள் வீணாகக் கெட்டுப் போகணும்னு ஒரு நாள் உரிமையோட அவரைக் கோவிச்சேன், ஊர் உலகத்தைப்போல ஒரு கலியாணம் காட்சி பண்ணிக்கினு நாலுபேரைப் போல இருக்கப்படாதான்னு கேட்டேன். அப்பத்தான் ஒரு இரகசியம் தெரிஞ்சுச்சு, எனக்கு!’’-பேச்சிற்கு அரைப்புள்ளி வைத்தாள்.

"ஊம், பேசேன், குழலி!”

ரேவதியின் மெய் தடுமாறியது; ஆனால், மெய்உண்மை தடுமாறுவதில்லையே! உள்ளுணர்வு நிதானமாகத் தான் விழித்திருக்கிறது.

குழலி தனது பேச்சுக்குத் தொடர்பு சேர்த்தாள். "அண்ணன் ஞானசீலன் சொன்ன சிதம்பர இரகசியம் இதுதான் - அவர், உயிருக்கு உயிராய்க் காதலித்த ஒருத்தியைக் கலியாணம் பண்ணிக்கிட்டாராம். அந்தப் பொண்ணும் அவர் மேலே உயிரையே வச்சிருந்தாளாம் , இடையிலே என்னவோ துளியூண்டு தகராறு வந்துச்சாம்; அந்தப் பெண் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்படாததாலே, இவர் ஆத்திரப்பட்டு, வாயும் வயிறுமாக இருந்த பெண்டாட்டியை எட்டித் தள்ளிப்பிட்டாராம். அந்த அம்மாளுக்குத் ' தான்' என்கிற ஆணவமும் அகங்காரமும் ரொம்ப ரொம்ப அதிகமாம். அதனாலே, அவள் என்னோட அன்பான அண்ணனை விவாகரத்துச் செஞ்சிட்டாளாம். இதனாலே மனசு வெறுத்து, கடல் மாதிரியான பங்களா, புதுசா வாங்கின பிரிமியர் கார் எல்லாத்தையும் விற்றுப்போட்டு, புதுக்கோட்டையை விட்டுட்டு பம்பாய்க்கு ஓடிப் போயிட்டாராம்! பின்னாலே ரொம்ப நாள் கழிச்சு தமிழ் மண்ணோட ஞாபகம் வந்திருக்கும் போலிருக்குது. இப்ப இங்கே வந்திருக்கார். தமிழிலே