உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அவள் விழித்திருந்தாள்

நர்மதா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள நர்மதா,

உன்னைப் பார்க்கும்போது மனசில் ஏற்படுகிற பரவசம் அப்படியே தேங்கித் தடைபோட்டதுபோல் நின்றுவிடுகிறது. பிறவியிலேயே ஆண்மையற்ற என்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆசைகளைத் தேக்கி வைத்திருக்கும் உன்னை, கோழையாக்கி ஏமாற்றிவிட்டேன். என்ன மன்னித்துவிடு. உனக்கு விருப்பமில்லாவிட்டால் என்னை விட்டுப்போய்விடு.

பட்டப்பா


நர்மதா சிலையாக நின்றாள். மரமாகிப்போனாள். கண்கள் வரண்டு போயின ஆண்மையற்றவன்... ஏன்தான் இந்த ஆண்கள் எதிலுமே இப்படி மெத்தனமாக இருக்கிறார்களோ? பெண்களை குரூரமாக வதைக்கிறார்களோ?

இனிமேல் என்ன செய்யவேண்டும்? புருஷன் உதவாக்கரை என்று இரைந்து சொல்லிக்கொண்டு வாசல்லே இறங்கி நடந்துவிட முடியுமா? சமையல்காரியின் பெண்ணாகிய தனக்கு கோர்ட்டும், கொத்தளமும் ஏற முடியுமா? இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்?

“நர்மதா பூரணி வந்திருக்கா பார். குளிச்சாச்சோ இல்லையோ?” என்று கங்கம்மா குரல் கொடுத்தாள்.

அன்று அவள் அவசரமாகக் குளித்தாள். சோப்பு தேய்த்துக்கொள்ளவில்லை. வாசனை என்ன வேண்டிக்கிடக்கு?

புடவையை அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளை பட்டப்பா ஆவலுடன் பார்த்தான், மனைவி என்கிற முறையில் அவளை சுவாதினமாகப் பார்த்துச் சுவைக்க அவன் காத்திருப்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

பூரணி வழக்கம்போல பூச்சரம் கொண்டு வந்திருந்தாள். “குளியல் என்ன வெண்ணிரிலேயா, பச்சைத்தண்ணியா?”

“நெருப்பிலே”

“சீ பைத்தியம்! உளர்றியே”

“ஆமாம் இப்படி உள்ளே வாங்க”