பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 103 ரயில் போகப் போக, அவன் குரல், எனக்குக் குறைவாகக் கேட்டாலும், அவன் கைகால்களை ஆட்டி, நெட்டி, நீட்டிய அன்பின் வெளிப்பாடுகள் மங்கலாக பழங்கலாகத் தெரிந்தாலும், ரயில் விலக, விலக, நான் அவனிடம் நெருங்கி, நெருங்கி, பின்பு நெருங்க இடமில்லாமல், அவனுடன் ஐக்கியமாகி விட்டேன். அவன் தந்தை, அவனை அடிப்பதுபோல், தோன்றியது. அடித்தார். அப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கையில், காத்திருக்கும் தந்தையைவிட, நேத்து வந்த அந்நியன் அவனுக்குப் பெரிசாகப் போன பொறாமையில் அவர் அடித்திருக்கலாம். அப்படி இருந்தாலும் அதில் தப்பில்லை. அந்தப் பையன், எனக்கு அறிமுகமான விதமே அலாதியானது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரியை முடித்த கையோடு, எனக்கு டில்லியில் வேலை கிடைத்தது. 'டில்லிக்கா? டில்லிக்கா?” என்று தாலுகா பரப்பைத் தாண்டாத என் அம்மா, "அய்யோ அம்மா" என்று அழ, அப்பாக்காரர் "மாதா மாதம் பணம் அனுப்பு” என்று உபதேசம் செய்ய, நான் டில்லிக்கு வந்தேன். கரோல் பாக்கில் பார்த்த தமிழர்களை, சிநேகித பாவத்துடன் பார்த்தபோது, அவர்கள் எனக்குக் முகம் கொடுக்க முடியாத அளவுக்கு 'பிஸியாக இருந்தார்கள். எப்படியோ ஒரு மெஸ்ஸில் இடம் கிடைத்தது. நான், இளிச்சவாயன் என்பதை நான் சொல்லாமலே புரிந்து கொண்ட அந்தத் தென்னிந்திய மெஸ்மேன் என்னை பர்ஸாத்தியில் போட்டார். வறுத்தெடுக்கும் வெயிலில், நான் வாடி வதங்கின்ேன். அப்போது வாரத்துக்கு இரண்டு நாட்கள் "ரைஸ் லெஸ் டேஸ்' அதாவது அரிசி பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட நாட்கள். வேகாத சப்பாத்தி, அழுகிப் போன பூசணிக்காய் சப்ஜியோடு உண்டு உலர்ந்து போன் நான், யாராவது வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட மாட்டார்களா என்று ஏங்கினேன். அந்தச் சமயத்தில், அலுவலகத்தில் அறிமுகமான ஒரு தமிழர், ஆர்.கே புரம் வரும்போது,