பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 உபதேசம் சென்று, இன்னதென்று புரியாத பிரபஞ்ச தத்துவத்தை, அதை ஈன்றெடுத்த இறைவனின் அருள் எண்ணம் காண, அடைகாக்கும் உணர்வுகளை அடக்கி, உணர்வுகளை உள்ளடக்கிய பேருணர்வுக்குள், பிறப்புக்களை அறுக்கும் பெரும் பரபரப்புக்குள், ஏகன்-அநேகன்-இனியவனான, மாயப் பிறப்பறுக்கும் மாயாவியைக் காண முடியா விட்டாலும், அவனின் அருட்துளி மேவும் பொருட்டு, ஆன்மாவைப் பிரபஞ்சமெங்கும் மானசீகமாகப் பறக்க விடும் அவனுக்கு, அருள்பாலிக்க அந்தச் சாமியார் மறுத்து விட்டார், அதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்கம்டாக்ஸ் தகராறுக்கும், உத்தியோக மாற்றத்திற்கும் தீர்வு காண வந்த பேர்வழிகளை மனதார வரவேற்று, வாயாற வாழ்த்தி வழியனுப்புகிறார். இவர் என்ன சாமியார்? இத்தனை சந்தர்ப்பங்களிலும், அவர்மீது கோபம்தான் வருகிறதே அன்றி வெறுப்பு வரவில்லையே, ஏன்? கார்த்தி சிறிது நேரம் குழம்பிப்போய் உட்கார்ந்தான். தலை கனத்தது. இதயம் அடித்துக் கொண்டது. தோப்பில் இருந்து கொண்டே சாமியாரை வெறித்துப் பார்த்தான். அவனை அறியாமலே, அவனுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. சாமியாரிடம் மானசீகமாக வாதாடினான். 'குறுக்குவழிப் பக்தர்களின் எத்து வழிக்கும் இணைந்து போவது போல் தோன்றும் உங்கள் ஞானவழி எனக்குப் புரியவில்லை. இறைவனை நிஷ் காமமாகத் தொழும் என்னிடம், நீங்கள் காட்டிய அலட்சியமும் எனக்குப் புரிபடவில்லை. நதிமூலம், ரிஷி மூலம் காண முடியாது. ஆனால் ஒன்று. இறைவனை, எந்த மகானும் மொத்தமாகக் குத்தகை எடுக்கவில்லை. உங்கள் மூலம் இறைவனைக் காண்பதற்காக நான் முயற்சித்தது தவறுதான். உங்களைப் போல் நானும் மனிதன்தான். நானே நேரடியாக இறைவனை அணுகலாம்; அணுக வேண்டும்; அணுக முடியும். உங்கள் மூலம் குறுக்குவழியில் இறைவனின் அருள்பாலிப்பை நான் நாடியது தவறு என்பதைப் புரிந்து