பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 அம்மாவைத் தேடி. ஆறேழு வயதுச் சிறுவர்களாக, சிறுமிகளாக அவதாரம் எடுத்திருந்தன. அத்தனையும் தத்தம் அன்னையரைத் தேடிக் கொண்டு, அம்மா. அம்மா என்று அழுதன. அவற்றிற்கு தூரத்தே, தத்தம் அன்னையினர் தெரிவதுபோல் ஒரு பிரமை அன்னையை அடையாளம் காண அத்தனை பேரும் முண்டியடித்தனர்; முடியவில்லை. மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், ஏழு வயதுப் பாலகனாய் உருமாறி, "என் அம்மா.. என் அம்மா. நீ ஒரு வில்லேஜ் உமன். நான் பார்க்கிற ஃபிகரில் நீ மிஸ்ஸா கிறியே... எங்கேயம்மா இருக்கிறே?" என்று புலம்பினார். மாஜி மிராசுதார் தங்கச்சாமி, "அம்மா, உன்னைக் காணுமே. நான் வந்துட்டேன், ஒடி வா. வந்து என்னை இடுப்பில் எடும்மா.. எடும்மா" என்று அரற்றினார். சுந்தரி, இப்போது ஆறு வயதுச் சிறுமியாக வடிவெடுத்து, தூரத்தே தெரிந்த உருவைப் பார்க்க முண்டியடித்தாள். அவள் முன்னால் நின்ற ஏழு வயதுச் சிறுமியின் தலை, அவளைப் பார்க்க முடியாமல் தடுத்தது. சுந்தரி, அம்மாவைப் பார்க்க முடியாத கோபத்தை அவள்மீது காட்டினாள். அவளின் தலையைத் தட்டிக் கொண்டே, "ஒத்தும்மே. என் அம்மாவப் பார்க்கணும். அய்ய" என்றாள். தலையில் தட்டப்பட்ட ஏழு வயதுச் சிறுமி, வார்த்தையால் பதிலடி கொடுத்தாள். "என்னாமே. என்னைபத்தி இன்னா நினைச்சிக்கீற. நான் வந்து எம்பட்டு காலமாறது. இன்னும் என்னோட ஆத்தாவ பார்க்கல. நீ தம்மாத்துண்டு நேரத்தில வந்துட்டு பார்த்துடலாமுன்னு நினைக்கிற. படா கில்லாடிதான்." சுந்தரிக்கு, அம்மாவைப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அழுகையைக் கொடுத்தது. கேவிக்கேவி