பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

j62 ஒன்றிப்பு சனிஸ்வரன் அடிப்பது மாதிரியாம். எந்தவீட்டில் பெண் எடுத்தாலும் எடுக்கலாம். ஏழரைநாட்டுச் சனி பிடித்த வீட்டில் எடுக்கக் கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் அடம்பிடிக்கப் போகிறார்கள். இப்படிப்பட்ட, இக்கட்டான சிக்கலில் இந்த காகங்கள் என்னை ஏன் சிக்க வைக்கின்றன? இவ்வளவுக்கும் நான் மென்மையானவன். கலகலப்பாக பேசுகிறவனே தவிர, காரியவாதி அல்ல. இப்பேர்ப்பட்ட என்னை, இவை ஏன் அப்படித் தாக்குகின்றன? என் மனைவியை, ஒரு குட்டு குட்டிவிட்டு, என்னை ஒன்பது தடவை குட்டியிருந்தாலும், அந்த மகிழ்ச்சியில் இந்த துக்கத்தை கரைத்திருப்பேன். ஆனால் என்னை மட்டுமே தனிப்படுத்தி குட்டுகின்றன. குடைகின்றன. இன்றைக்கோ, இந்தத் தாக்குதல் உச்சத்திற்கு போய்விட்டது. கடந்த இரண்டு நாட்களாக வெளியூரில் திரிந்து விட்டு, நேற்றிரவு, பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்பினேன். இந்த மாடியறையில் பேண்ட் சட்டையோடு தூங்கிப்போனேன். ஆனாலும் காலையில் ஆறு மணிக் கெல்லாம் எழுந்து, அறையில் இருந்து வெளிப்பட்டேன். இந்த காக்கைகளின் நினைவே இல்லாமல், முதல் மாடியிலுள்ள குடும்பத்தாருடன் காபி சாட்சியாய் சங்கமிக்க மொட்டை மாடித் தளத்தில் ஐந்தாறு எட்டுக்கள் போட்டிருப்பேன். அப்போது - திடீரென்று தலைக்கு மேல் கால் முளைத்த கரிக்கட்டை ஒன்று எங்கிருந்தோ ஏவுகணையாய் பாய்வதுபோல் தோன்றுகிறது. நான் தற்காப்பாக, கரங்களை தலைக்கு கவசமாக்குவதற்கு முன்பாகவே, உச்சந்தலை பிய்த்தெடுக்கப்பட்டது போன்ற வலி. இரண்டு நகக்கால்கள், தலையை உழுது, ரத்தக்கோடுகளால் வரப்பு கட்டியது போன்ற பிராண வலி. வலது கையை தூக்கி தலைக்குள் விரல் விட்டு துழாவி, வெளியே எடுத்தால் ஆள்காட்டி விரலில் சிவப்புக் கசிவு. நான்