பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'உம்மால் இயலாது!’ என்று மனிதன் கூறினான்.

'ஏன் இயலாது? உன்னை ஏன் நான் நரகத்துக்கு அனுப்ப இயலாது?’ என்று கடவுள் கேட்டார்.

‘ஏனா? அங்குதானே நான் எப்பொழுதும் வசித்து வருகிறேன்!’ என்று மனிதன் கூறினான்.

தேவநீதி மன்றத்தில் நிசப்தம். சிறிது நேரத்துக்குப் பின்னர்,

‘நரகத்துக்கு அனுப்ப முடியாதென்றால் உன்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்புவேன், அது நிச்சயம்!’ என்று கடவுள் கூறினார்.

‘உம்மால் இயலாது’ என்று மனிதன் கூறினான்.

‘ஏன் இயலாது? உன்னை ஏன் நான் சுவர்க்கத்துக்கு அனுப்பமுடியாது?’ என்று கடவுள் கேட்டார்.

‘ஏனா? எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் சுவர்க்கம் என்றால் என்ன என்று என்னால் எண்ண முடிந்ததில்லையே!’ என்று மனிதன் கூறினான்.

தேவ நீதி மன்றத்தில் நிசப்தம்

_________