பக்கம்:ஆடரங்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஆடரங்கு

கிரமே போய்விட்டது. சாமர்த்தியமான வேலைக்கு லாயக்கற்றவன் என்பது அவன் காரியாலயத்தில் அவனைப்பற்றி ஏற்பட்ட அபிப்பிராயம்.

இதற்குள் ராஜாமணியைப் பற்றிக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் வைத்திருந்த நம்பிக்கைகளும் ஆசைகளும் படிப்படியாக இறங்கிக்கொண்டே வந்துவிட்டன. தம்முடைய கடைசித் துயரத்தை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயாரானார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

இடையில் ராஜாமணிக்குக் கல்யாணம் ஆயிற்று. மீண்டும் தகப்பனுக்கும் பிள்ளைக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்து விடும்போல் இருந்தது. மிகவும் நல்ல இடத்தில் எப்படியோ எக்கச் சக்கமாக நேர்ந்துவிட்டது அது. ராஜாமணிக்குக் கல்யாணம் ஆயிற்று. அழகான பெண், பணக்கார வீட்டுப்பெண். அந்தக் கல்யாணத்திற்குப் பிறகு ராஜாமணிக்குங்கூட வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாவது போல் இருந்தது. மீண்டும் மனிதனாக வாழ்க்கை நடத்திவிடுவது என்று தீர்மானித்தவனாக ராஜாமணி, பல வருஷங்களுக்கு முன் விட்ட இடத்திலிருந்து. அடி எடுத்து வைத்து முன்னேற முயன்றான். மனைவி என்கிற புதுத் தெம்பின் உதவியால் இரண்டொரு படிகள் ஏறக்கூட ஏறினான்.

ஆனால் அந்த மனைவி என்கிற தெம்பு அதிக நாள் இருக்கவில்லை. கல்யாணமான இரண்டாவது வருஷத்தில் டைபாய்டில் படுத்தாள். கணவன் மனசில் ஏராளமான ஏக்கங்களைப் போராட விட்டுவிட்டு அவள் ஒரு நாள் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு ராஜாமணி தலை நிமிரவே யில்லை. விதியுடன் போராடத் தனக்குத் தெம்பு இல்லை என்று தீர்மானித்து விட்டான். வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிவிட முயன்றான். கிழத் தகப்பனுக்காகத்தான் அவன் வாழ்க்கையுடன் ஒட்டிக் கொண்டிருந்தான் என்றுகூடச் சொல்லலாம்.

அவனைத் தூண்டிவிடக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்குத்தான் எங்கிருந்து, இவ்வளவும் ஆனபிறகு தெம்பு வரும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/105&oldid=1523726" இலிருந்து மீள்விக்கப்பட்டது