பக்கம்:ஆடரங்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத் தியாகம்

101

ஒரு சமயம் தம் பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க முயன்றார். அந்தப் பேச்சு காதில் விழுந்ததும் தம்பிள்ளை தம்மைப் பார்த்த பார்வையை அவரால் ஆறு வருஷங்களுக்குப் பிறகு இன்னமும் மறக்க முடியவில்லை.

சாவை எதிர்பார்த்துக்கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் வாழ்க்கையில் சாத்தியமில்லை. ஆனாலும் சாவு என்று எண்ணினால் அவர் மனசு துணுக்குற்றது. அறுபத்துநாலு வயசிலும் அவர் மரணத்தை வரவேற்கத் தயாராக இல்லை.

****

ராஜாமணியினுடைய சிந்தனைகளில் கிழவரின் குரல் குறுக்கிட்டது. "போ! போய்க் காரியத்தைப் பாரு. குளி. சாப்பிடலாம்" என்றார் கிழவர்.

ராஜாமணி எழுந்தான். கொடியில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு அவன் கிளம்பும் சமயம் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் சொன்னார்: "மார்கழி, தை என்று தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறேனே தவிர, சாவை இன்றே வரவேற்க எனக்குத் தைரியம் இல்லை."

ராஜாமணி சற்றுத் தயங்கினான்; "ஏனப்பா இன்றைக்கு இப்படிப் பேசறே!" என்றான்.

கிழவர் அவன் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் மனசில் ஒரு விஷயம் அன்று பளிச்சிட்டது. 'என் துரதிருஷ்டந்தான் என் பிள்ளையையும் இப்படி விடாமல் பாதிக்கிறது. நான் போய்விட்டால் ஒருவேளை அவன் சுகமாகவே இருப்பான். அது சாத்தியமே!' என்று எண்ணினார். அந்த எண்ணம் அவர் மனசிலே விசுவரூபம் எடுத்தது.

தம் பிள்ளை தம்மையே பார்த்துக்கொண்டு நின்றதைப் பார்த்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்: "போ, போய்க் குளித்துவிட்டு வா, எனக்குப் பசிக்கிறது" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/106&oldid=1523735" இலிருந்து மீள்விக்கப்பட்டது