பக்கம்:ஆடரங்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஆடரங்கு

தெரியாது. கள்ளங் கபடமில்லாமல் பேசுவான். எது சொன்னாலும் மறு வார்த்தை பேசாமல் செய்வான். என்னைவிட என் மனைவி ராஜிக்கு அவனிடம் பிரியம் அதிகம். சொந்தத் தம்பியையும்விட அவனிடம் அதிகப் பரிவு காட்டுவாள். காலத்தில் அவன் வயிறு நிறையச் சோறு போட்டுவிடுவாள். இது ஒன்றுதான் அவனிடம் குறை என்று சொல்ல முடியும்; கொஞ்சம் சாப்பாட்டு ராமன். அதனால் என்ன?

படிப்பிலே அவனைச் சொல்லிப் பயனில்லை. அவன்மேல் வஞ்சம் கிடையாது. அகப்பட்ட நேரமெல்லாம் விழுந்து விழுந்துதான் படிப்பான். வீடு அதிரத் தவளை மாதிரி உரக்கப் பாடம் பாடமாகப் படிப்பான். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு, சில சமயம் பன்னிரண்டு மணி வரைக்குங்கூடப் படிப்பான். ஆனால் படித்ததொன்றும் அவனுடைய களிமண் மூளையில் ஏறாது! அவன் படித்துவிட்டு வருகிற பாடத்தில் அதே சமயம் கேள்வி கேட்டால்கூட அவனால் பதில் சொல்ல முடியாது. கவனம் அவ்வளவு! ஆறாவது பாரம் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் நான். எஸ். எஸ். எல். சி. பரீட்சைக்கு இரண்டு மாதம் இருக்கும் போது உட்கார்ந்து இரவு பகலாக அவனுக்கு எல்லாவற்றையும் கரைத்துப் புகட்டிவிடலாம் என்று எனக்கு எண்ணம்.

படிப்பு வரவில்லையே தவிர ராமுவை அசடு என்று சொல்லி விட முடியாது. கடை கண்ணிக்குப் போய் வருவதெல்லாம் என் வீட்டில் அவன் இருந்த வரையில் அவன்தான் செய்து வருவான். சாமர்த்தியமாகத்தான் செய்வான்—குற்றம் சொல்லும்படியாகவே இருக்காது.

தன் வயதுப் பையன்களுடன் அதிகமாகச் சேரமாட்டான். ஆனால் அவன் வகுப்பில் அவன் வயதுப் பையன் ஒருவன்- அவன் பெயரும் ராமுதான். இருவரும் அத்தியந்த நண்பர்கள் - இணைபிரியாத தோழர்கள். அந்த ராமுவும் ஏழைதான்- ஆனால் அநாதை. மாமா வீட்டில் போட்ட சோற்றை நாய் மாதிரி தின்றுவிட்டு, பெற்றோர் அன்பை உணராமல் வளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/109&oldid=1525073" இலிருந்து மீள்விக்கப்பட்டது