பக்கம்:ஆடரங்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஆடரங்கு

விட்டது. தன்‌ புஸ்தகங்களைப்‌ பிரித்து வைத்துக்கொண்டு, மனம்‌ எங்கெல்லாமோ ஓட, பிரமித்தவன்‌. போல, பேயடித்‌தவன்‌ போல, உட்கார்ந்திருப்பான்‌. நான்‌ அவன்‌ மனத்தைத்‌திருப்பிப்‌ படிப்பில்‌ செலுத்த முயன்‌றதெல்லாங்கூடப் பயன்‌தரவில்லை. 'சரிதான்‌; இந்த வருஷம்‌ போகட்டும்‌; அடுத்த வருஷம்‌ தானாக மனம்‌ தேறிவிடுவான்‌? என்று நான்‌ ௮வனை அதிகமாக வற்புறுத்தாமல்‌ இருக்துவிட்டேன்‌.

தினம்‌ உத்ஸாகமில்லாமல்‌ பள்ளிக்கூடம்‌ மட்டும்‌ போம்‌ வந்துகொண் டிருந்தான்‌. மற்றப்படி முன்போலெல்லாம்‌ அவன்‌ சாப்பிடுவதுகூட இல்லை. வீட்டு வேலைகளைக்கூட அவன்‌ அதிகமாகக்‌ கவனித்துக்கொள்வதில்லை. நானும்‌ ராஜியும்‌, “பாவம்‌! அன்பு நிறைந்த தோழனை இழந்து விட்டவனை அதிகமாக எதுவும்‌ சொல்லக்கூடாது” என்று விட்டுவிட்டோம்‌.

பரிட்சைக்கு இரண்டு வாரங்கள்‌ இருக்கும்போது ஒருநாள்‌ மாலை அவன்‌ கையில்‌ ஒரு கட்டுப்‌ புஸ்தகங்கள்‌, நோட்டுப்‌ புஸ்தகங்களுடன்‌ வந்தான்‌.

"ஏதடா ராமு, இதெல்லாம்‌?" என்று நான்‌ கேட்டேன்‌.

"ராமுவினுடையது, வாங்கிண்டு வரணும்னு எனக்குத்‌ தோன்றியது. வாங்கிண்டு வந்தேன்‌ ”' என்றான்‌ ராமு.

"....ம்‌... உங்கிட்ட இல்லையா, இந்தப்‌ புஸ்தகங்களெல்லாம்‌?" என்று கேட்டேன்‌ நான்‌.

சிறிது நேரம்‌ தயங்கினான்‌ எங்கள்‌ ராமு. பிறகு சொன்‌னான்‌: “என்னவோ இதை எல்லாம்‌ வாங்கிண்டு வரணும்னு: தோணித்து; வாங்கிண்டு வந்தேன்‌”. என்றான்‌ மீண்டும்‌.

பாவம்‌! தன்‌ சிநேகிதனின்‌ ஞாபகார்த்தமாகத்‌ தன்னிடம்‌. அவனுடைய புஸ்தகங்களும்‌ நோட்டுப்‌ புஸ்தகங்களுமாவது இருக்கட்டும்‌ என்று ஆசைப்படுகிறான்‌ என்று எண்ணிக்‌ கொண்டேன்‌. இருந்துவிட்டுப்‌ போகட்டுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/111&oldid=1523741" இலிருந்து மீள்விக்கப்பட்டது